பெட்டாலிங் ஜெயா: முறையற்ற ஆவணங்களின்றி வரும் வெளிநாட்டவர்களை அனுமதிக்கும் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அறுவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைதுசெய்துள்ளனர்.
அவர்களில் ஐவர் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் என்று ஆணையத்தின் தலைமை ஆணையர் (செயல்பாடுகள்) அகமது குசைரி யஹயா தெரிவித்தார்.
அந்த ஐவரும் விமான நிலையத்துடன் தொடர்புடைய அதிகாரிகள்.
அவர்களிடமிருந்து 3.2 கிலோ நகைகளும் 75 தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன என்றும் அவற்றின் மதிப்பு இரண்டு மில்லியன் ரிங்கிட் (S$610,000) என்றும் கூறப்பட்டது.
இம்மாதம் 9ஆம் தேதிமுதல் 11ஆம் தேதிவரை நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளின்போது அவை சிக்கின.
வெளிநாட்டு ஊழியர்கள் எளிதாக மலேசியாவிற்குள் நுழைவதற்காக முகவர்களிடமிருந்து அந்த ஐந்து குடிநுழைவு அதிகாரிகளும் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.
அத்துடன், 70 வங்கிக் கணக்குகள் சிலாங்கூர் பிரிவு ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அதன்மூலம் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு 3.3 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது.