கோலாலம்பூர் விமான நிலையம் விஐபி வளாகம் முன்பு 5 மீட்டர் அகலத்தில் குழி

1 mins read
cca63d4f-b4af-444a-9f0b-8899ce658e7e
விஐபி வளாகத்தின் நுழைவாயிலுக்கும் வெளிவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் குழி காணப்பட்டதாக அமைச்சு கூறியது. - படம்: மலேசியா பொதுப்பணி அமைச்சின் ஃபேஸ்புக்
multi-img1 of 2

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் (விஐபி) பயன்படுத்தும் பங்கா ராயா வளாக நுழைவாயிலில் புதிதாக குழி ஒன்று காணப்பட்டதாக மலேசியாவின் பொதுப்பணி அமைச்சு தெரிவித்து உள்ளது.

ஐந்து மீட்டர் அகலமும் ஒரு மீட்டர் ஆழமும் உள்ள அந்தக் குழி, வளாகத்தின் நுழைவாயிலுக்கும் வெளிவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்ததாக அமைச்சு புதன்கிழமை (செப்டம்பர் 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லவும் வெளிநாடுகளில் இருந்து வந்திறங்கவும் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் வழி என்றும் அது கூறியது.

குழியின் அருகே விமான நிலையத்தின், மூடப்பட்ட கழிவுநீர்க் கால்வாய் ஒன்று உள்ளது.

குழி ஏற்பட்டுள்ள வட்டாரத்தில் எல்லா வாகனங்களும் செல்லமுடியும் என்றாலும் அங்கு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டு உள்ளதாக அமைச்சின் அறிக்கை கூறியது.

கழிவுநீர்க் கசிவை ஏற்படுத்தும் குழாயால் அந்தக் குழி ஏற்பட்டதாஎன்று ‘எம்ஏஎச்பி’ எனப்படும் மலேசியா விமான நிலைய குழுமம் விசாரித்து வருவதாகவும் அந்தப் பகுதியை கண்காணிக்கவும் சோதனையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

விசாரணை முடிவுற்றதும் விரிவான அறிக்கையை எம்ஏஎச்பி வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலேசியத் தலைநகரின் சாலையில் திடீர் என இதுபோன்ற குழி ஏற்படுவது இது முதல்முறை அல்ல. ஆகஸ்ட் மாதம் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட குழிக்குள் விழுந்த இந்தியாவின் விஜயலட்சுமி என்னும் 48 வயதுப் பெண்ணை இன்றுவரை மீட்க இயலவில்லை.

குறிப்புச் சொற்கள்