யாங்கோன்: மியன்மாரில் பயன்பாட்டில் இல்லாத ஜேட் சுரங்கம் ஒன்றில், பருவமழையின் காரணமாக கசடுக் குவியல் சரிந்து விழுந்ததில், ரத்தினத் துண்டுகளைத் தேடிக்கொண்டிருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், புதைந்து கிடந்த சுமார் 15 பேர் காணாமல் போனதாக அரசு ஊடகங்கள் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 30) தெரிவித்தன.
மியன்மாரில் ஒரு பெரிய, ஒழுங்குபடுத்தப்படாத சுரங்கத் துறை உள்ளது. மேலும், அதன் வடக்கில் உள்ள கச்சின் மாநிலம், உலகின் மிகப்பெரிய ஜேடைட் கல்லின் மூலமாக விளங்குகிறது. ஜேடைட் பல ஆசிய கலாசாரங்களில் மங்கலகரமானதாகக் கருதப்படுவதோடு, அண்டை நாடான சீனாவில் பெரும் லாபத்தையும் ஈட்டித் தருகிறது.
மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிந்தைய உள்நாட்டுப் போரில் மோதும் பிரிவுகள் பல சுரங்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன. அவை, கிடைக்கும் லாபத்தைத் தங்கள் கருவூலங்களை நிரப்பப் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், வறுமையில் வாடும் உள்ளூர் மக்கள் நிலத்தடியில் கடுமையாக உழைக்கின்றனர் அல்லது பிழைப்புக்காக எஞ்சியிருக்கும் பொருள்களைத் தேடிச் சேகரிக்கின்றனர்.
ஜூன் 28ஆம் தேதி இரவு கச்சின் மாநிலத்தின் ஹபகாண்ட் நகரில், மின்விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த இடத்தில் தேடிக்கொண்டிருந்த சுமார் 20 சுயதொழில் ஜேட் சேகரிப்பாளர்கள், குவியல் திடீரென சரிந்ததில் புதைக்கப்பட்டனர் என்று அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
“பல நாள்களாக பெய்த கனமழையால் பழைய சுரங்கக் கழிவுக் குவியல்கள் நிலை குலைந்ததைத் தொடர்ந்து இந்தச் சரிவு ஏற்பட்டது,” என்று ‘தி குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார்’ செய்தித்தாள் கூறியது.
“குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 15 பேரைக் காணவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் குழுக்கள் தொடர்ந்து தோண்டி வருகின்றன,” என்றும் அது மேலும் கூறியது.

