கோலாலம்பூர்: மலேசியாவில் மின்சிகரெட் பழக்கத்தால் 2019ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மொத்தம் ஐவர் மாண்டிருக்கக்கூடும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமது தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி, மின்சிகரெட்டுகள் உட்பட புகைப்பிடிக்க பயன்படுத்தப்படும் பொருள்களுடன் தொடர்புடைய நோய்களால் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நோய்வாய்ப்பட்டவர்களில் 44 பேர் கடுமையான நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 39 பேர் நுரையீரலுடன் நேரடி தொடர்பு இல்லாது மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“=மின்சிகரெட்களைப் புகைத்தவர்கள் மரணம் அடைந்துள்ளபோதிலும் அவர்களது இறப்புக்கும் மின்சிகரெட்டுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று டாக்டர் ஸுல்கிஃப்லி நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
தெளிவான ஆதாரங்கள் போதுமான இல்லாததாலும் மற்ற காரணங்களாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மின்சிகரெட் பழக்கத்தால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கையைப் பற்றி குவந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியான பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்தவருமான திரு வான் ரசாலி வான் நூர் கேள்வி எழுப்பியிருந்தார்.
சிறுவர்களும் பதின்மவயதினரும் மின்சிகரெட் பழக்கத்துக்கு அடிமையாகாளமல் இருக்க சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பற்றியும் அவர் கேள்வி கேட்டார்.
தொடர்புடைய செய்திகள்
புகைப்பிடிக்க பயன்படுத்தும் பொருள்களுடன் தொடர்புடைய மரண காரணங்களை மேலும் சிறந்த முறையில் அடையாளம் காண பயன்படுத்தப்படும் கண்காணிப்பு முறையைச் சுகாதார அமைச்சு வலுப்படுத்தி வருவதாக டாக்டர் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
இதற்கிடையே, இணையம் மூலம் மின்சிகரெட் விற்பனைக்கு மலேசியா தடை விதித்துள்ளபோதிலும் மின்சிகரெட்டுகள் இணையம் மூலம் பரவலாக விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இணையத்தளங்கள் மூலம் மின்சிகரெட் வாங்குவோரின் வயதும் உறுதி செய்யப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது.
இணையம் மூலம் மின்சிகரெட் வாங்கியோரின் முகவரிக்கு மின்சிகரெட்டுகள் விநியோகம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

