வாஷிங்டன்: அமெரிக்கா அதன் வர்த்தகப் பங்காளிகளின் பொருள்கள் மீதான வரி விகிதத்தை உயர்த்த இருக்கிறது. வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தால் ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து வரி அதிகரிப்பு நடப்புக்கு வரும்.
இதன் விளைவாக குறிப்பிட்ட பொருள்களின் விலை அதிகரிக்கும் என்றும் இதனால் வாடிக்கையாளர்கள் பாதிப்படைவர் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, ஐந்து பொருள்கள் கடுமையாகப் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றில் ஒன்று காப்பி. அமெரிக்காவில் விற்கப்படும் காப்பிக்கொட்டைகளில் 99 விழுக்காடு மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அமெரிக்காவின் தேசிய காப்பிச் சங்கம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பெரியவர்கள் நாள்தோறும் காப்பி அருந்துபவர்கள் என்று அது கூறியது.
பிரேசில், கொலம்பியா, வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பேரளவிலான காப்பிக்கொட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பிரேசிலிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஆகஸ்ட் 1லிருந்து 50 விழுக்காடு வரி விதிக்கப்படக்கூடும்.
இதனால் காப்பிக்கொட்டையின் விலை ஏற்றம் காணும் சாத்தியம் அதிகமுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வியட்னாமிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 20 விழுக்காடு வரி விதிக்கப்படும்.
அமெரிக்க வரிவிதிப்பால் சட்டைகளின் விலையும் ஏற்றம் காணும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா இறக்குமதி செய்யும் சட்டைகளில் பாதிக்கும் மேல் சீனா, வியட்னாம், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றன.
இந்த மூன்று நாடுகளின் பொருள்கள் மீதான வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதலாக 30 விழுக்காடு வரி விதித்துள்ளது.
பங்ளாதேஷ் பொருள்கள் மீது 35 விழுக்காடு வரி விதிக்கப்படக்கூடும் என்று அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம் மிரட்டல் விடுத்துள்ளது.
‘ஜாஸ்மின்’ அரிசியின் விலையும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஜாஸ்மின் அரிசி தாய்லாந்திலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. தாய்லாந்து 36 விழுக்காடு, இந்திய 26 விழுக்காடு, பாகிஸ்தான் 29 விழுக்காடு வரியை எதிர்நோக்குகின்றன.
கோக்கோ, மின்னணுவியல் பொருள்களின் விலையும் வரிவிதிப்பு காரணமாக உயரும் என்று கூறப்படுகிறது.

