தோக்கியோ: குடிபோதையிலிருந்த விமானி ஒருவரால் மூன்று விமானங்கள் தாமதமடைந்ததற்காக ஜப்பான் ஏர்லைன்ஸ் (ஜேஏஎல்) புதன்கிழமை (செப்டம்பர் 10) மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி நேர்ந்த அச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோருவதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர் மிட்சுக்கோ தோத்தோரி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
அன்றைய நாளில் ஹவாயியில் அந்த விமானி அளவிற்கு அதிகமாக மது அருந்தியதால் மறுநாள் ஜப்பானின் நகோயாவிற்குச் செல்லவிருந்த விமானத்தை அவரால் இயக்க முடியவில்லை.
இதன் தொடர்பில் அவ்விமான நிறுவனத்திற்கு ஜப்பானியப் போக்குவரத்து அமைச்சு இவ்வாண்டில் இரண்டாம் முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், செய்தியாளர் சந்திப்பின்போது ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைமைப் பாதுகாப்பு அலுவலர் யூகியோ நககாவாவிற்குப் போக்குவரத்து அமைச்சு எழுத்துவழி எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது. அவர் செய்தியாளர்கள்முன் தலை தாழ்த்தி மன்னிப்பு கோரினார்.
முன்னதாக, இரவுப் பணி ஊழியர்கள் மது அருந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் கடந்த டிசம்பரில் தடை விதித்தது. மெல்பர்ன் - நரிட்டா இடையே இயக்கப்பட்ட விமானத்தின் விமானிகள் இருவர் அதிக அளவில் மது அருந்தியதைத் தொடர்ந்து, அத்தடை விதிக்கப்பட்டது.
அப்போதும் விமானம் மூன்று மணி நேரம் தாமதமாகக் கிளம்பியது. அதனைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்சுக்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு எச்சரிக்கை விடுத்தது.
விமானிகளின் மது அருந்தும் போக்கு மீண்டும் தொடர்ந்துள்ள நிலையில், அதனைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகத் திருவாட்டி தோத்தோரி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தன் ஊழியர்களின் உடல்நிலை, அவர்களின் மதுப் பயன்பாடு குறித்த சோதனைகள் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.