தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓடுபாதையில் ஓடிய கரடியால் விமான சேவை பாதிப்பு

2 mins read
6c7b26f9-ad42-457f-847b-c57a3c748322
ஜப்பானில் 2024 ஏப்ரல் முதல் 12 மாதங்களில் 219 பேர் கரடித் தாக்குதலுக்கு ஆளாகினர். - படம்: இபிஏ

தோக்கியோ: ஓடுபாதையில் கரடி ஒன்று சுற்றித்திரிந்ததை அடுத்து, ஜப்பானிய விமான நிலையம் ஒன்றில் வியாழக்கிழமை (ஜூன் 26) விமான சேவைகளை ரத்துசெய்ய நேர்ந்தது.

ஜப்பானின் வடக்கிலுள்ள யமகாத்தா விமான நிலையப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை அக்கரடி காணப்பட்டது. அதனையடுத்து, உடனடியாக ஓடுபாதை மூடப்பட்டது.

அதனால், காலை நேரத்தில் நான்கு விமானங்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாகப் பறந்தன.

நண்பகல் நேரத்தில் மீண்டும் தென்பட்ட அக்கரடி, இம்முறை ஓடுபாதையிலேயே ஓடியது.

அதனைத் தொடர்ந்து, விமான நிலைய ஊழியர்கள் காரில் ஏறி அக்கரடியைத் துரத்தினர். ஓடுபாதை மீண்டும் மூடப்பட்டது.

கரடி இன்னும் விமான நிலையப் பகுதியிலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

“இப்போதைய நிலைமையில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க முடியாது,” என்று யமகாத்தா விமான நிலைய அதிகாரி அகிரா நாகாய் கூறினார்.

கரடியால் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கரடியைப் பிடிக்க வேட்டைக்காரர்கள் வரவழைக்கப்பட்டு, வலை விரிக்கப்படவுள்ளது. கரடி தப்பிவிடாமல் இருக்க விமான நிலையத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இரவு 8 மணிவரை ஓடுபாதையை மூடியிருக்கத் திட்டமிட்டுள்ளதாகத் திரு நாகாய் சொன்னார்.

கடந்த 2024 ஏப்ரல் - 2025 மார்ச் காலகட்டத்தில் ஜப்பானில் 219 பேரைக் கரடிகள் தாக்கின. அவர்களில் அறுவர் உயிரிழந்துவிட்டனர்.

பருவநிலை மாற்றத்தால் உணவு வளங்களும் உறங்கும் காலமும் பாதிக்கப்பட்டதாலும் மூப்படையும் சமூகத்தில் மக்கள் நெருக்கம் குறைந்துள்ளதாலும் நகர்ப்பகுதிகளுக்குள் கரடிகள் அடிக்கடி நுழைந்துவிடுகின்றன என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்