தோக்கியோ: ஜப்பானில் உள்ள விமான நிலையம் ஒன்றில் சிறிய அளவில் வெடிப்பு நிகழ்ந்ததைத் தொடர்ந்து அங்கு அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
வெடிப்பு குறித்து தகவல் ஏதும் இல்லை.
இரண்டாம் உலகப் போரின்போது தற்கொலைத் தாக்குதல்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட மியாஸாக்கி விமான நிலையத்தில் புதன்கிழமையன்று (அக்டோபர் 2) அச்சம்பவம் நிகழ்ந்தது. அதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
மியாஸாக்கி விமான நிலையம், தெற்கு ஜப்பானில் இருக்கும் கியூஷூ தீவில் அமைந்துள்ளது. விமான நிலைய முனையத்திற்குக் குறைந்தது 100 மீட்டர் அப்பால் வெடிப்பு நிகழ்ந்ததுபோல் ஜப்பானிய ஊடகங்கள் வெளியிட்ட காணொளிகளிலும் படங்களிலும் தெரிந்தது.
சிங்கப்பூர் நேரப்படி காலை 6.59 மணிக்குச் சம்பவம் குறித்து உள்ளூர் தீயணைப்புப் பிரிவுக்கு அழைப்பு வந்ததென ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்குத் தகவல் வந்தது. ஏதேனும் வெடித்திருக்கக்கூடும் என்றும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் விமான நிலைய ஊழியர் ஒருவர் சொன்னதாக ஏஎஃப்பி தெரிவித்தது.
விமான ஒடுபாதையின் ஒரு பகுதியில் குழி ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் ஏஎஃப்பிடம் கூறினார். அதுகுறித்து வேறு தகவல் எதையும் தெரிவிக்காத அவர், புதன்கிழமை மாலை வரை விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார்.