பாகான் டாத்துக்: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் நீர்ப்பகுதியின் நடுவே கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல் திங்கட்கிழமை (மார்ச் 10) திறக்கப்பட்டது.
பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் ஷா இப்பள்ளிவாசலை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். மலேசிய துணைப் பிரதமரும் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சருமான அகமது ஸாஹித் ஹமிதி உள்ளிட்டோரும் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் திரண்டிருந்த 2,500க்கும் அதிகமானோர் நோன்பு துறந்ததாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.
மஸ்ஜித் துமினா ஹமிதி (Masjid Tuminah Hamidi) எனும் இந்தப் பள்ளிவாசலுக்கான கட்டுமானப் பணிகள் 2017ஆம் ஆண்டு தொடங்கியதாக புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சு அறிக்கையில் தெரிவித்தது. 53 மில்லியன் ரிங்கிட் செலவில் (15.93 மில்லியன் வெள்ளி) அமைந்துள்ள இப்பள்ளிவாசல், 2023ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகான் டாத்துக்கில் பேராக் ஆற்றுப் பகுதியில் மஸ்ஜித் துமினா ஹமிதி அமைந்துள்ளது. இங்கு 5,000 பக்தர்கள் வரை இருக்கலாம்.
இந்தப் பள்ளிவாசல், வழிபாட்டுத் தலமாகவும் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் அமைந்துள்ளது.

