வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், சாலைகள்; பேங்காக்கில் பேரிடர்நிலை அறிவிப்பு

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள், சாலைகள்; பேங்காக்கில் பேரிடர்நிலை அறிவிப்பு

படம்: ஏஎஃப்பி

26 Sep 2026 - 5:01 pm

2 mins read

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேங்காக்கின் 50 மாவட்டங்களிலும் வெள்ளப் பேரிடர்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அமைப்புகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை எடுக்க இந்த அறிவிப்பு அதிகாரம் அளிக்கிறது.

இதனையடுத்து, லண்டன் சென்றுள்ள பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் உடனடியாகத் தமது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமையிலிருந்து (செப்டம்பர் 24) கிட்டத்தட்ட 300 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளதாகப் பேங்காக் ஆளுநர் சட்சார்ட் சிட்டிபுன்ட் தெரிவித்துள்ளார்.

நிலைமை சற்று மட்டுப்பட்டுள்ளதாகச் சனிக்கிழமை பிற்பகலில் தெரிவித்த அவர், மழை உடனடியாக நின்றுவிட்டாலும் வெள்ளம் வடிய இரண்டு, மூன்று நாள்களாகலாம் என்றும் சொன்னார்.

இடைவிடாத மழையால் சாலைகளிலும் கால்வாய்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கரையோரங்களில் அமைந்துள்ள வீடுகளிலும் உணவகங்களிலும் வெள்ளநீர் புகுந்தது. பல இடங்களில் முழங்கால் அல்லது இடுப்பு உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது.

நகரிலுள்ள நீரேற்று நிலையங்கள் அனைத்தும் முழுத்திறனுடன் செயல்படுவதாகவும் நொடிக்கு 1,200 கனமீட்டர் நீர் வெளியேற்றப்படுவதாகவும் பேங்காக் பெருநகர நிர்வாகம் தெரிவித்தது.

மத்திய பேங்காக்கின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 67 வயது கடைக்காரரான சோம்கிட் கூறுகையில், “வெள்ளம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த இரண்டு நாள்களாக எனது கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

கிட்டத்தட்ட 500 பேரைப் பலிகொண்ட 2011ஆம் ஆண்டு தாய்லாந்து வெள்ளத்தைவிட இந்த முறை நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்யும் மழையால் பேங்காக் கிழக்குப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படுக்கையில் உள்ள நோயாளிகளைத் தற்காலிகமாக மருத்துவமனைகளுக்கு மாற்றுமாறு பேங்காக் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், வாகனங்களை மேடான பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல அறிவுறுத்திய அவர், அக்டோபர் 2 வரை எம்ஆர்டி ரயில் நிலையங்களில் வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதனிடையே, தாய்லாந்தின் 21 மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் பேரிடர்த் தடுப்பு, தணிப்புப் பிரிவு தெரிவித்தது.

கிழக்கு, வடகிழக்கு, மத்திய தாய்லாந்தில் செப்டம்பர் 27ஆம் தேதி வரை காற்றழுத்தத் தாழ்வுநிலை நீடிப்பதால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படலாம் எனப் பேரிடர் தடுப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
பேங்காக்மழைவெள்ளம்