பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேங்காக்கின் 50 மாவட்டங்களிலும் வெள்ளப் பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அமைப்புகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை எடுக்க இந்த அறிவிப்பு அதிகாரம் அளிக்கிறது.
செப்டம்பர் 24ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 300 மில்லிமீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளதாகப் பேங்காக் ஆளுநர் சட்சார்ட் சிட்டிபுன்ட் தெரிவித்துள்ளார்.
இடைவிடாத மழையால் சாலைகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாகக் கரையோரங்களில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் உணவகங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. பல இடங்களில் இடுப்பு மற்றும் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கியுள்ளது.
மத்திய பேங்காக்கின் வடக்குப் பகுதியில் வசிக்கும் 67 வயது கடைக்காரரான சோம்கிட் கூறுகையில், “வெள்ளம் தொடர்ந்து அதிகரிப்பதாகவும், கடந்த இரண்டு நாட்களாகத் தமது கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
கிட்டத்தட்ட 500 பேரைப் பலிகொண்ட 2011 ஆம் ஆண்டு தாய்லாந்து வெள்ளத்தைவிட இந்த முறை நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்யும் மழையால் பேங்காக் கிழக்குப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படுக்கையில் உள்ள நோயாளிகளைத் தற்காலிகமாக மருத்துவமனைகளுக்கு மாற்றுமாறு பேங்காக் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
மேலும், வாகனங்களை மேடான பகுதிகளுக்குக் கொண்டு செல்லுமாறும், அக்டோபர் 2 வரை எம்ஆர்டி ரயில் நிலையங்களில் வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு, வடகிழக்கு, மத்திய தாய்லாந்தில் செப்டம்பர் 27ஆம் தேதி வரை காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படலாம் எனப் பேரிடர் தடுப்புத் துறை எச்சரித்துள்ளது.
