மலேசியாவில் வெள்ளம்: ஏழு மாநிலங்களில் 11,000 பேர் பாதிப்பு

2 mins read
93874dcf-3c82-490b-a37e-04d3b0bb6901
கிளந்தான் தலைநகர் கோத்தா பாருவின் சில பகுதிகளில் வெள்ளத்தில் நடந்துசெல்லும் மக்கள். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஏழு மாநிலங்களில் 11,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை அந்நாட்டின் தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு திங்கட்கிழமையன்று (நவம்பர் 24) வெளியிட்டது.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை பருவமழைக் காலம் காரணமாக மலேசியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் உள்ள மாநிலங்களில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம்.

ஒவ்வோர் ஆண்டும் பலர் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படுவதுண்டு.

திங்கட்கிழமை காலை 6 மணி நிலவரப்படி வெள்ளம் காரணமாக 3,839 குடும்பங்களைச் சேர்ந்த 11,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கெடா, கிளந்தான், பினாங்கு, பேராக், பெர்லிஸ், திரெங்கானு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மலேசியாவின் வடகிழக்கு மாநிலமான கிளந்தான் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துடனான எல்லையைக் கொண்டுள்ள இம்மாநிலத்தில் 8,228 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 60 துயர்துடைப்பு முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டோர் இந்த முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 23) பெர்லிஸ் மாநிலத்தில் கனமழை பெய்ததை அடுத்து, அங்குள்ள கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 400 பேர் பாதிப்படைந்ததாக பெர்னாமா செய்தித்தளம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் பள்ளிவாசல் ஒன்றில் அடைக்கலம் நாடியிருப்பதாகவும் அது செய்தி வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்