சிட்னி: ஃபிளைதுபாய் விமானத்தின் இந்திய விமானியைத் தாக்கிய ஓமானிய உதவி விமானிக்குத் தங்களது இஸ்லாமிய மையத்துடன் தொடர்பு இருப்பதாக ஐக்கிய அரபு சிற்றரசுகளைச் சேர்ந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மெல்பர்னைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கடுமையாக மறுத்துள்ளார்.
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தின் விமானி அறையில் அந்த ஓமானிய விமானி, அவசரக்காலக் கோடரியைப் பயன்படுத்தி இந்திய விமானி ஸ்மித் மச்சாரைத் தாக்கினார்.
திரு மச்சார் எதிர்த்துப் போராடி உதவி கோர முயன்றார். அப்போது, திரும்பும் விமானத்துக்காக நியமிக்கப்பட்டிருந்த மற்றொரு விமானி, விமானியின் அறைக் கதவு வழக்கத்திற்கு மாறாக திரும்பத் திரும்பத் திறந்து மூடுவதைக் கண்டு, விமான ஊழியர் மற்றும் பயணிகளின் உதவியோடு விமான அறைக்குள் நுழைந்து திரு மச்சாரைக் காப்பாற்றி, தாக்குதல் நடத்திய ஓமானிய விமானியை மடக்கிப் பிடித்தனர்.
அதன் பின்னர், விமானம் சவூதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. அல்காய்தாவின் செப்டம்பர் 11 தாக்குதலால் ஈர்க்கப்பட்டு, பேரளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் அந்த ஓமானிய விமானி இச்செயலில் ஈடுபட்டதாக ஐக்கிய அரபு சிற்றரசுகள் அரசுத் தரப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஓமானிய விமானி, ஆஸ்திரேலியாவில் படித்த காலத்தில் தீவிரவாத சித்தாந்தங்களைப் படித்ததாலும் பயங்கரவாத அமைப்புகளைப் போற்றும் இணையப் பதிவுகளைப் பின்தொடர்ந்ததாலும் பயங்கரவாதியாக மாறியதாக ஐக்கிய அரபு சிற்றரசுகளின் வழக்கறிஞர்கள் கூறினர்.
மேலும், ஆஸ்திரேலியாவில் ‘மை சென்டர்’ என்ற அமைப்பை நடத்தி வரும் அபு ஹம்ஸா என்றழைக்கப்படும் சமீர் மொஹ்தாதி என்பவருடன் அவருக்குப் பழக்கம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ‘மை சென்டர்’ மீதோ அல்லது அபு ஹம்ஸா மீதோ எந்தக் குற்றவியல் நடவடிக்கையும் சுமத்தப்படவில்லை. இக்குற்றச்சாட்டுகளுக்கு சமூக ஊடகத்தில் காணொளி மூலம் பதிலளித்த அபு ஹம்ஸா, தம்மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்று சாடியுள்ளார்.
