ஃபிளைதுபாய் இணை விமானி தீவிரவாதச் சித்தாந்தத்திற்கு ஆட்படுத்தப்பட்டவர்: நெட்டன்யாகு

ஃபிளைதுபாய் இணை விமானி தீவிரவாதச் சித்தாந்தத்திற்கு ஆட்படுத்தப்பட்டவர்: நெட்டன்யாகு

படம்: ராய்ட்டர்ஸ்

02 Oct 2026 - 10:33 am

2 mins read

துபாய்: ஃபிளைதுபாய் விமானத்தைத் தாக்க எண்ணிய இணை விமானி, தீவிரவாதச் சித்தாந்தத்தை வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆட்படுத்தப்பட்டிருந்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வியாழக்கிழமை (அக்டோபர் 1) தெரிவித்தார். அதேவேளையில், இதன் பின்னணியில் பயங்கரவாதத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்திவருவதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், விமானம் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கப் பயணிகள் விமானத்தைத் திசை திருப்பிச் சவூதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கினர். அதன் பின்னர், அதில் பயணம் செய்த பெரும்பாலான இஸ்ரேலியப் பயணிகள் சொந்த நாட்டிற்குத் திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது. சம்பவம் குறித்து இணை விமானியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஃபாக்ஸ் அண்ட் ஃபிரண்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த நேர்காணலில் திரு நெட்டன்யாகு கூறினார்.

“தாக்குதல் நடத்தியவர், விமான ஊழியர்களைப் பார்த்து ‘என்னைக் கொல்லுங்கள், என்னைக் கொல்லுங்கள்’ என்று கூச்சலிட்டுள்ளார். இதிலிருந்து அவர் தற்கொலை எண்ணத்துடன் செயல்பட்டது தெளிவாகிறது,” என்றார் இஸ்ரேலியப் பிரதமர்.

‘பயங்கரவாதச் செயல் அல்லது நோக்கம்’ உள்ளதா என்பது உட்பட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தலைமை அரசாங்க வழக்கறிஞர் வியாழக்கிழமை அறிவித்த நிலையில் அவரின் கருத்து வந்துள்ளது.

விமானியைக் கத்தியால் குத்தி விமானத்தை விபத்துக்குள்ளாக்க இணை விமானி முயன்றபோது பேரழிவைத் தடுத்ததாக இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சாரையும் பயணிகளையும் திரு நெட்டன்யாகு முன்னதாகப் பாராட்டியிருந்தார்.

சவூதி அரேபிய உள்துறை அமைச்சு வெளியிட்ட தகவலில், இணை விமானி வியாழக்கிழமை காலையில் சவூதியிலிருந்து பாதுகாப்புப் படையினருடன் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் அவர் விமானத்தின் முதன்மை விமானியைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்
ஈரான்போர்ஈரான் போர்இஸ்ரேல்பிரதமர்பெஞ்சமின் நெட்டன்யாகுஅமெரிக்காதுபாய்விமானம்ஐக்கிய அரபு சிற்றரசுகள்