புதுடெல்லி: ‘ஃபிளைதுபாய்’ விமானத்தைக் கவிழ்க்க முயன்று, அதைத் தடுத்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரைத் தாக்கிய இணை விமானி, தீவிரவாத எண்ணங்களைக் கொண்டிருந்ததால் ஓமான் அவருக்குப் பறக்க தடை விதித்திருந்தது தெரியவந்துள்ளது.
ஹமாம் அல்ஹமாமி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த 29 வயது ஆடவர், ஓமான் குடியுரிமை பெற்றவர். சிரியாவில் அதிகக் காலம் வாழ்ந்த அவர் தீவிரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 2024ல் ‘ஓமான் ஏர்’ நிறுவனத்தில் பயிற்சி பெற்றபோது அவரிடம் தீவிரவாதம் தொடர்பான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவருக்குப் பறக்க தடை விதிக்கப்பட்டது.
எனினும், ஃபிளைதுபாய் அவரைப் பணியமர்த்தியதால், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் - இஸ்ரேல் இடையிலான முக்கிய விமானப் பாதையில் அவர் பறக்க முடிந்தது.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 170க்கும் மேற்பட்ட பயணிகளுடன் 34,000 அடி உயரத்தில் பறந்த போயிங் 737 விமானத்தை இஸ்ரேலில் மோதி விபத்துக்குள்ளாக்க அல்ஹமாமி திட்டமிட்டிருந்தார்.
விமானத்தின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்து, தன்னைத் தடுக்க வந்த விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த நிலையிலும் ஸ்மித் மச்சார் விமான அறைக் கதவைத் திறந்துவிட்டதால் ஊழியர்களும் பயணிகளும் இணைந்து அவரை மடக்கிப் பிடித்தனர்.
விமானத்தில் பயணம் செய்த மற்ற விமானிகள் இருவர் விமானத்தை இயக்கி, சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினர்.
தாக்குதலுக்குப் பிறகு அல்ஹமாமியின் சமூக ஊடகக் கணக்குகளில் அல் காய்தா பயங்கரவாதிகளின் படங்களும் தாக்குதல் குறித்த எச்சரிக்கைப் பதிவுகளும் வெளியாகியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
