பொருளியல் மீதே கவனம், முதல்வர் பதவியின் மீதன்று: பக்கத்தான் ஹரப்பான்

பொருளியல் மீதே கவனம், முதல்வர் பதவியின் மீதன்று: பக்கத்தான் ஹரப்பான்

2 mins read
a9f8fed9-1385-4fbf-a0e5-f90ca8441deb
ஜோகூர் கெஅடிலான் (பிகேஆர்) கட்சித் தலைவர் டாக்டர் சலிஹா முஸ்தபா. - படம்: ஃபிரீ மலேசியா டுடே
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசை அமைப்பதற்கான ஆணை தங்களுக்கு வழங்கப்பட்டால், 1895ல் நடப்பிற்கு வந்த ஜோகூர் மாநில அரசியலமைப்புச் சட்டத்தையும் முதல்வரை நியமிப்பதற்கான ஜோகூர் சுல்தானின் அதிகாரத்தையும் முழுமையாக நிலைநிறுத்தப் போவதாகப் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி உறுதியளித்துள்ளது.

மக்களுக்குப் பயனளிக்கும் கொள்கைகளையும் சலுகைகளையும் முன்வைப்பதே கூட்டணியின் முன்னுரிமை என்பதால், முதல்வர் பதவி தங்களது பிரசாரத்தின் முக்கியக் கூறாக மாறுவதை பக்கத்தான் விரும்பவில்லை என்று ஜோகூர் கெஅடிலான் (பிகேஆர்) கட்சித் தலைவர் டாக்டர் சலிஹா முஸ்தபா கூறினார்.

“நாங்கள் மக்களுடன் தொடர்ந்து கலந்துரையாடுவோம். அவர்களின் கவலைகளைக் கேட்போம். அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஜோகூரின் பொருளியலை முன்னோக்கிச் செலுத்தவும் உதவும் கொள்கைகளையும் தீர்வுகளையும் வழங்குவோம்,” என்று அவர் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பிறகு மாநில அரசை அமைப்பதில் கூட்டணி வெற்றி பெற்றால், அதன் முதல்வர் வேட்பாளரை அறிவிக்குமாறு பக்கத்தான் கூட்டணியிடம் ஜோகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் காஸி வலியுறுத்திய நிலையில், திருவாட்டி சலிஹா இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் தங்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தால், அரசை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்க தகுதியும் அனுபவமும் வாய்ந்த பல தலைவர்கள் பக்கத்தான் கூட்டணியில் உள்ளனர் என்று டாக்டர் சலிஹா கூறினார்.

மக்களின் நல்வாழ்வு தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டிய தேவையுள்ளது என்றும் அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர் பாருகூட்டணிவெற்றி