தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா, பாகிஸ்தான் பூசலால் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம்: மலேசியா

2 mins read
8c4fa97c-c497-4b4c-b445-83b5b91e7dc6
அரிசி, பருப்பு, சீனி போன்ற முக்கிய உணவுப் பொருள்களை மலேசியா இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் இறக்குமதி செய்கிறது. - படம்: குலினா

பெட்டாலிங் ஜெயா - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வலுத்துவரும் பூசலால் மலேசியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இரு நாடுகளும் முழுவீச்சாகப் போரில் இறங்கினால் மலேசியாவுக்கான உணவுப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்களின் ஆகியவற்றின் விநியோகம் தடைபடும் என்று பல வர்த்தகர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

அரிசி, குறிப்பாக புழுங்கல் அரிசி, மசாலா வகைகள், வெங்காயம், பருப்பு, சீனி, மருத்துவப் பொருள்கள், இரும்பு, எஃகு போன்ற மூலப் பொருள்கள் ஆகியவை இந்தியாவிலிருந்து மலேசியாவுக்குள் இறக்குமதியாகும் முக்கியப் பொருள்கள்.

பாகிஸ்தானிலிருந்து மலேசியா, பாஸ்மதி அரிசி, துணிமணிகள், பழங்கள், மாட்டிறைச்சி போன்ற முக்கிய பொருள்களை இறக்குமதி செய்வதாக கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் நிவாஸ் ராகவன் குறிப்பிட்டார்.

“விநியோகத் தொடர்கள், குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்துக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையிலான தளவாடங்கள், கப்பல் வழிகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும்,” என்றார் அவர்.

இந்தியாவிலிருந்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி, வெங்காயம், பருப்பு, மசாலா ஆகியவற்றுக்கான விலையும் கணிசமாக உயரக்கூடும் என்ற அவர், வேறு நாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்ய அதிக விலை கொடுக்க நேரிடுவதோடு மலேசியாவின் எண்ணிக்கைக்கும் தரத்துக்கும் அது பொருந்தாமல் போகலாம் என்றார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் கூடிய விரைவில் அமைதியை நாடும் என்றும் வர்த்தகர்கள் நம்புகின்றனர்.

இருநாட்டுப் பூசல் மலேசிய வர்த்தகங்களில் தாக்கம் ஏற்படுத்தினாலும் அனைத்து அம்சங்களும் பாதிக்கப்படாது என்று மலேசிய-இந்திய துணிமணி, பொதுக் கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்தது.

இந்தியா-பாகிஸ்தான் பூசலில் தென் இந்தியா பாதிக்கப்படவில்லை என்பதால் அந்த வட்டாரத்திலிருந்து துணிமணிகளும் மசாலாப் பொருள்களும் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என்றார் சங்கத்தின் தலைமைச் செயலாளர் மகேஸ்வரி ராமசாமி.

எனினும், போர் மூண்டால் விநியோகம் குறைந்து விலைகள் அதிகரிக்கக்கூடும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்