ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு ஜாவா மாநிலத்தில் 1,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் நச்சுணவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலவச மதிய உணவுத் திட்டத்தின்கீழ் பள்ளியில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம், இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இத்திட்டத்துக்கு மேலும் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மேற்கு ஜாவா மாநிலத்தின் நான்கு பகுதிகளில் பெரிய அளவில் நச்சுணவு பாதிப்பு ஏற்பட்டதாக அதன் ஆளுநர் டெடி முல்யாடி வியாழக்கிழமை (செப்டம்பர் 25) ராய்டட்ர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சுகாதாரக் காரணங்களுக்காக இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் குரல் கொடுத்து வருகின்றன. இவ்வேளையில் இந்த நச்சுணவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சென்ற வாரம் மேற்கு ஜாவா, மத்திய சுலாவெசி மாநிலங்களில் இலவச மதிய உணவை உண்ட 800 மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இலவச சத்துணவுத் திட்டத்தின் தரநிலைகள், அதில் உணவு சரியாகக் கண்காணிக்கப்படாமல் இருக்கக்கூடும் என்ற அச்சம் ஆகியவற்றின் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
இலச மதிய உணவுத் திட்டம் 20 மில்லியனுக்கும் அதிகமானோரைச் சென்றடைந்துள்ளது. இந்தோனீசியாவின் 280 மில்லியன் மக்களில் 83 மில்லியன் பேரை இவ்வாண்டிறுதிக்குள் சென்றடைவது இத்திட்டத்தின் இலக்காகும்.
திட்டத்துக்குச் செலவிடப்படும் 171 டிரில்லியன் ருப்பியா (13 பில்லியன் வெள்ளி) அடுத்த ஆண்டு இரு மடங்காக உயரும்.
தொடர்புடைய செய்திகள்
இம்மாதம் 22ஆம் தேதி மேற்கு பாண்டுங்கில் 470க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்ப்பட்டதாக திரு முல்யாடி தெரிவித்தார். பிறகு புதன்கிழமை (செப்டம்பர் 24) மேற்கு பாண்டுங்கிலும் சுக்கபூமி வட்டாரத்திலும் மேலும் மூன்று நச்சுணவுச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
நச்சுணவு தயாரான சமையலறைகள் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கண்காணிக்கும் தேசிய சத்துணவு அமைப்பின் தலைவர் டாடான் ஹிண்டாயானா தெரிவித்தார்.