ஜோகூர் பாரு: ஜோகூர் பாரு உணவகங்களில் சாப்பிடுவது அதிகச் செலவை ஏற்படுத்துவதோடு, பணத்தைச் சேமிப்பதற்காகச் சிலர் வீட்டில் சமைத்த உணவை வேலைக்குக் கொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இங்கு, நீண்டகாலம் வாழும் மக்களுக்கு உணவு விலைகள் பழகியிருக்கலாம் என்றாலும், வேலைக்காகவோ, திருமணத்திற்குப் பிறகோ இந்நகரத்திற்கு இடம்பெயரும் பலர், உணவின் விலை அதிகமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைகின்றனர்.
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரைவிட ஜோகூர் பாருவில் சமைக்கப்பட்ட உணவுகளின் விலை ஆச்சரியமளிக்கும் வகையில் அதிகமாக உள்ளதாகச் சமூக வலைதளப் பதிவாளர்கள் பலர் தங்களின் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“ஜோகூர் பாருவில் உணவுப் பொருள்களின் விலை காலப்போக்கில் உயர்ந்து வருகிறது, புதிதாக வந்தவர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் இந்த உண்மை நிலவரத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்,” என்று 31 வயதான சியாஸ்வானி ஃபைசுல்பஹ்ரி கூறினார்.
ஜோகூர் பாரு நகர்ப்பகுதியில் பணிபுரியும் திட்டப் பொறியாளரான இவர், பொரித்தக் கோழி, காய்கறி, ஆம்லெட் துண்டு, ஒரு குவளை ஐஸ் டீயுடன்கூடிய ‘நாஸி சம்பொர்’ (கலவை சாதம்) உணவின் விலை 15 ரிங்கிட் (S$4.72) ஆகிறது என்றார்.
வெவ்வேறு உணவகங்கள் தங்களுக்குச் சொந்தமான விலைகளைக் கொண்டுள்ளன என்றும், தங்களின் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ற உணவகத்தைத் தேர்ந்தெடுப்பது நுகர்வோரின் கையில்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
வீட்டில் சமைத்த உணவை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் அல்லது வேலைக்குச் செல்லும் வழியில் தெருவோரக் கடைகளில் காலை, மதிய உணவை வாங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
“அந்த வழியில் காலை, மதிய உணவிற்கு 10 ரிங்கிட் மட்டுமே நான் செலவிடுகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
செயற்கை ஆபரணங்கள், அவற்றின் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடையின் இணை உரிமையாளரான ஐரீன் வோங், ஜோகூர் பாருவில் உணவகங்களில் சாப்பிடுவது தனக்கும் தன் கணவருக்கும்கூட அதிகச் செலவு பிடிக்கிறது என்றார்.
தாமான் அபாத்தில் உள்ள ஒரு காப்பிக்கடை ஒன்றில் இரண்டு முட்டைகள், இரண்டு கிண்ணம் சூப் நூடல்ஸ், இரண்டு குவளை காபியைக் கொண்ட காலை உணவிற்கு இந்தத் தம்பதியர் தினமும் 30 ரிங்கிட் செலவிடுகின்றனர்.
தங்கள் கடை அமைந்துள்ள லார்க்கின் சென்ட்ரல் முனையத்தில் உள்ள உணவு நிலையத்திலிருந்து பெறப்படும் வெறும் சாதம், காய்கறிகள் அடங்கிய மதிய உணவிற்கு 20 ரிங்கிட் செலவாகிறது என்று அவர் கூறினார்.
“நாங்கள் வெவ்வேறு உணவகங்களில் காலை உணவைச் சாப்பிட முயன்றோம், ஆனால் விலையில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை,” என்று 65 வயதான ஐரீன் வோங் தெரிவித்தார்.
நான்கு மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றத் தொடங்கிய வாடிக்கையாளர் சேவை ஊழியரான எஸ். வினோஷன், “வாங்கும் சக்தியை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஜோகூர் பாருவைவிட சிங்கப்பூரில் சமைத்த உணவின் விலை குறைவு என்றார்.
“சிங்கப்பூரில் S$4 முதல் S$5 வரை ஒரு தட்டு சிக்கன் ரைஸ் வாங்கலாம், ஆனால் ஜோகூர் பாருவில் அதற்கு எட்டு ரிங்கிட் முதல் 10 ரிங்கிட் 10 வரை செலவாகிறது,” என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர், பூச்சோங்கைச் சேர்ந்த 21 வயதான அவர், சிங்கப்பூர்-மலேசிய இணைப்புப் பாலத்திற்கு அருகிலுள்ள இரண்டு அறை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் சராசரி மாதாந்திர வாடகை 2,400 ரிங்கிட் ஆகும். குறிப்பாக, சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களிடையே இதற்கான தேவை அதிகமாக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.


