ஆசியாவில் உணவுப் பொருள்களின் விலை உயரக்கூடும்

ஆசியாவில் உணவுப் பொருள்களின் விலை உயரக்கூடும்

2 mins read
69bec4d9-b9ce-4468-8eef-ee7118c4e53e
ஆஸ்திரேலியாவில் உள்ள விவசாயிகள் வேளாண் துறையில் தங்களது நடவடிக்கையைக் குறைத்துக் கொண்டனர். இதன் காரணமாக உணவுப் பொருள்கள் சந்தையில் போதுமான அளவில் இல்லை. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாட்டு இறைச்சி, கோதுமை, பார்லி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை 20 விழுக்காடு வரை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.

அதற்கு முக்கியக் காரணம் உயர்ந்துவரும் உரம் மற்றும் எரிபொருள் விலை.

ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்குப் பகுதிகளிலிருந்து எரிபொருள், உரம் உள்ளிட்டவற்றுக்கான விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆஸ்திரேலியாவில் உள்ள விவசாயிகள் வேளாண் துறையில் தங்களது நடவடிக்கையைக் குறைத்துக் கொண்டனர். இதன் காரணமாக உணவுப் பொருள்கள் சந்தையில் போதுமான அளவில் இல்லை.

ஆஸ்திரேலியாவின் உணவுப் பொருள்களின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றன.

அதேபோல், ஆஸ்திரேலியாவின் மாட்டு இறைச்சியைச் சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தோனீசியா, தென்கொரியா ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன.

2025ஆம் ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியா 14.6 பில்லியன் வெள்ளி மதிப்பிலான மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது.

ஆஸ்திரேலியா அதன் விவசாயத்திற்குத் தேவையான உரங்களில் 65 விழுக்காட்டை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அதேபோல் 90 விழுக்காட்டு எரிபொருளும் மத்திய கிழக்கிலிருந்து வருகிறது.

ஈரான் போர் தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் விலை 30 விழுக்காடு வரை உயரலாம் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியா போல் மற்ற உலக நாடுகளிலும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் ஆண்டு இறுதியில் உணரப்படும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

உரம், எரிபொருள் விலை வழக்கநிலைக்குத் திரும்பாவிட்டால் ஆஸ்திரேலியாவில் வேளாண் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கக்கூடும். இதனால், ஏற்றுமதிகளில் அதிகச் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

ஈரான் போருக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் ஒரு டன் யூரியாவின் விலை 800 வெள்ளி. ஆனால் இப்போது அது 1,800 வெள்ளி. அதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலை 1.70 வெள்ளியிலிருந்து 2.65 வெள்ளிக்கு அதிகரித்தது. பின்னர் அது 3.40 வெள்ளியாக மாறியது.  

குறிப்புச் சொற்கள்