பேங்காக்: தோக்கியோவில் உள்ள உடற்பிடிப்பு நிலையம் ஒன்றில் கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக நம்பப்படும் தாய்லாந்து சிறுமியின் தாயார் தைவானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தைவானின் குடிநுழைவு அதிகாரிகளின் தகவலின்படி, சிறுமியின் தாயார் கடந்த செப்டம்பரில் தைவானுக்கு வந்துள்ளார். மேலும் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை மீறி அங்கேயே தங்கியுள்ளார். உள்ளூர்க் காவல்துறை அவரை ஒரு தனி வழக்கில் கைது செய்து குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைத்தது.
அதிகாரிகள் அவரை நாடு கடத்தத் திட்டமிட்டுள்ளபோதும், சிறுமியின் வழக்கு விசாரிக்கப்படும் ஜப்பானுக்கு அனுப்புவதா அல்லது தாய்லாந்துக்கே அனுப்புவதா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
முன்னதாக, தாய்லாந்து தேசிய காவல்துறைத் தலைவர் கிட்ரட் ஃபான்பெட், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய அமைப்புகள் அல்லது தனிநபர்கள் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டார்.
சிறுமியைத் தாயகம் அனுப்ப, ஜப்பானில் விசாரணை நிறைவடைவது அவசியம் என்று உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஜப்பானிய காவல்துறை அளித்த தகவலின்படி, அந்தத் தாய் தனது மகளைக் கடந்த ஜூன் மாதம் ஜப்பானுக்கு அழைத்துச் சென்றிருந்தார்.
அந்தச் சிறுமியை தனது தனி அறை உடற்பிடிப்பு நிலையத்தில் வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்படும் ஒரு ஜப்பானியர், இந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார்.

