பொந்தியான்: ஜோகூருக்கு வரும் வெளிநாட்டு கார்கள் RON95 சலுகை விலை பெட்ரோலை பயன்படுத்தக் கூடாது என்பதை பெட்ரோல் நிலையங்கள் உறுதிசெய்ய வேண்டும் என ஜோகூர் மாநில உள்ளூர் வர்த்தகம், வாழ்க்கைச் செலவினம் அமைச்சு நினைவூட்டி உள்ளது.
சீனப் புத்தாண்டு கொண்டாட்ட காலத்தை முன்னிட்டு அந்த நினைவூட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்தக் கொண்டாட்ட காலத்தின்போது ஜோகூருக்குள் நுழையும். என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் பாரு நகரில் ஜனவரி 21ஆம் தேதி, சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்றில் சலுகை விலை RON95 பெட்ரோல் நிரப்பப்பட்டபோது அந்த வாகனம் பிடிபட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த பெட்ரோலை வெளிநாட்டு வாகனங்கள் பயன்படுத்தக்கூடாது என்ற தகவலை வெளியிடுவதாக அமைச்சின் இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா பொர்னோமோ கூறினார்.
வெளிநாட்டு வாகனத்தில் சலுகை விலை பெட்ரோல் நிரப்புவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அது குறித்த விசாரணையில் அமைச்சு இறங்கியது.
“அந்த வாகனத்தின் உரிமையாளரான பெண், சலுகை விலை பெட்ரோலை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. வெளிநாட்டு வாகனங்கள் RON97 பெட்ரோலை மட்டுமே நிரப்பிக்கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
சலுகை விலை பெட்ரோலை வெளிநாட்டு வாகனங்கள் பயன்படுத்துகின்றனவா என்பதைக் கண்டறிய பெட்ரோல் நிலையங்களில் அடிக்கடி சோதனை நடத்த இருப்பதாக உள்ளூர் வர்த்தகம், வாழ்க்கைச் செலவினம் அமைச்சு தெரிவித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, இரண்டாவது பாலம் மற்றும் நீரிணை அருகே உள்ள பெட்ரோல் நிலையங்கள் சோதிக்கப்படும் என்று அது குறிப்பிட்டது.