வாஷிங்டன்: வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்கர்களை வேலையில் அமர்த்தி, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அமெரிக்கக் குடிநுழைவுச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 7) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ஹியூண்டே மோட்டோர் உற்பத்தி ஆலையில் அமெரிக்க அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதை நடத்தினர்.
அதில் ஏறத்தாழ 475 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் கிட்டத்தட்ட 300 பேர் தென்கொரியர்கள்.
“உங்கள் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. உலகத் தரம் வாய்ந்த சாதனங்களை உற்பத்தி செய்ய உங்களிடம் உள்ள தொழில்நுட்ப ஆற்றல்மிக்க ஊழியர்களை அமெரிக்காவுக்குச் சட்டப்படி கொண்டு வர ஊக்குவிக்கிறோம். அவ்வாறு செய்யத் தேவையான அலுவல்களை அமெரிக்கா விரைவாகச் செய்து முடிக்கும். அதே சமயத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்க ஊழியர்களை வேலையில் அமர்த்தி அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்,” என்றார் அதிபர் டிரம்ப்.
இதற்கிடையே, அமெரிக்காவில் உள்ள ஹியூண்டே ஆலையில் தென்கொரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டது குறித்து தென்கொரியா வருத்தம் தெரிவித்துள்ளது. ஊழியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு மாட்டப்பட்டு அவர்கள் அதிகாரிகளின் வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதைக் காட்டும் காணொளிப் பதிவுகள் வெளியிடப்பட்டன.
கைது செய்யப்பட்ட தென்கொரிய ஊழியர்களை விடுவித்து அவர்கள் தாயகம் திரும்ப தேவையான ஏற்பாடுகளைத் தென்கொரியா மேற்கொண்டு வருகிறது.
இத்தகவலைத் தென்கொரிய அதிபர் மாளிகையில் உள்ள அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவில் செயல்படும் வர்த்தகங்களுக்குச் சொந்தமான இடங்களில் மேலும் பல திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்காவில் உள்ள ஹியூண்டே ஆலையில் நடத்தப்பட்ட திடீர் சோதனை, கைது நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள கசப்புணர்வுக்குத் தீர்வு காண தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சூ ஹியூன் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

