சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள்வழி பயணம் செய்யும் வெளிநாட்டினர், அவரவர் நாடுகளில் வழங்கப்படும் கட்டண அட்டைகளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) முதல் அங்கும் பயன்படுத்தலாம்.
நீண்டநாள்களாக வெளிநாட்டினர் சோல் நகர பொதுப்போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சிரமத்தைப் போக்க அந்நாட்டு ரயில் நிர்வாகம் இந்த ஏற்பாட்டை முன்னெடுத்துள்ளது.
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 3.7 விழுக்காடு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சோல் மாநகராட்சி அறிவித்து இருக்கிறது.
சோலில் புதிதாக 440 கட்டண அட்டை இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. அவற்றில் கட்டண அட்டைகளின் மதிப்பைக் கூட்டிக்கொள்ளவும் முடியும்.
சோலில் இயங்கும் 273 ரயில் நிலையங்களிலும் அந்த இயந்திரங்கள் சேவை வழங்கும். அங்கு ஒன்று முதல் எட்டு மாறுபட்ட ரயில் பாதைகள் உள்ளன.
வெளிநாடுகளில் செயல்பாட்டில் உள்ள கடன், பற்று அட்டைகள், தொலைபேசி கட்டணத் தளங்களான கக்காவ் பே, நெவர்பே (Kakao Pay, Naver Pay) ஆகியவற்றின் வழியாக ரயில் கட்டணங்களைச் செலுத்தலாம்.
சோல் பருவநிலை அட்டை (Seoul Climate Card) என்ற கட்டண அட்டையின் மூலம் ரயில்களிலும் பேருந்துகளிலும் தென்கொரியத் தலைநகரில் பயணம் செய்யலாம். அந்த வகை அட்டைகளையும் புதிய இயந்திரங்களில் பயன்படுத்தலாம். அந்த அட்டைகள் ஒரு நாள் முதல் ஏழு நாள்களுக்கு குறுகிய காலப் பயணம் செய்யும் வசதியை வழங்கக்கூடியவை.
தேவை ஏற்பட்டால் அதனை 30 நாள்களுக்குப் பயன்படுத்துவதற்கேற்ப சலுகை வழங்குவது குறித்து மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.

