நேப்பாள வெள்ளப்பெருக்கில் வெளிநாட்டு மலையேறிகள் சிக்கித் தவிப்பு

நேப்பாள வெள்ளப்பெருக்கில் வெளிநாட்டு மலையேறிகள் சிக்கித் தவிப்பு

100க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்
படம்: ராய்ட்டர்ஸ்

12 Oct 2026 - 6:47 pm

1 mins read

காத்மாண்டு: நேப்பாளத்தின் மத்திய வட்டாரத்தில் கடந்த வார இறுதியில் புதி கண்டகி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலையேறிகள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பதாகத் திங்கட்கிழமை (அக்டோபர் 12) நேப்பாள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோர்க்கா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு, புதி கண்டகி ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலங்கள், மலையேற்றப் பாதைகள் போன்றவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதைத் தொடர்ந்து வெளிநாட்டவர் ஒன்பது பேர் உட்பட 96 பேரை அதிகாரிகள் மீட்டனர்.

முன்னதாக, ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் 1,457 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை.

தற்போது வெள்ள நீர் வடிந்துவிட்ட போதிலும், ராணுவத்தின் மீட்பு நடவடிக்கை திங்கட்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெள்ளப்பெருக்கால் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை. இருப்பினும், சேறும் சகதியுமாக வந்த வெள்ளத்தில் வீடுகளும் உள்கட்டமைப்புகளும் அடித்துச் செல்லப்பட்டதில் கிராமவாசிகள் ஐவரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

மனஸ்லு பாதுகாப்புப் பகுதித் திட்ட அதிகாரி புவன் ராஜ் ஓஜா, மலையேற்றப் பாதை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பயணிகள் திரும்ப முடியாமல் தவிப்பதாகத் தெரிவித்தார். திரும்ப விரும்பும் பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடரும் என்றும் பாதுகாப்பான இடங்களில் மலையேற்றத்தைத் தொடரலாம் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்