வாஷிங்டன்: அமெரிக்கக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கை 2026ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 விழுக்காடுவரை சரிவடைந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் ஆகக் குறைவான விண்ணப்ப எண்ணிக்கை இதுவென்று ‘காமன் ஆப்’ (Common App) அமைப்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் விசா விதிகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து, வெளிநாட்டு மாணவர்கள் நாட்டிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த எடுத்த தீவிர முயற்சிகள் இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம். 2025ஆம் ஆண்டின் எண்ணிக்கையுடன் ஒப்பிட, இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ள அனைத்துலக மாணவர் எண்ணிக்கை ஏறக்குறைய 16,000 குறைவு.
பல்கலைக்கழகங்களில் பயிலும் வயதுடைய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், உயர்கல்வியின் மதிப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளதாலும் ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பல அமெரிக்கக் கல்லூரிகள் மேலும் சிரமத்துக்கு உள்ளாகும் என்று அறிக்கை சுட்டியது.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் இரட்டை இலக்க விகிதத்தில் சரிந்துள்ளன. பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அனைத்துலக மாணவர்களை ஈர்க்கத் தொடங்கியதால், ஐரோப்பிய மாணவர்களின் விண்ணப்பங்களும் 4 விழுக்காடு வரை குறைந்துள்ளன.
விசா பெறுவதில் நிலவும் கடினமான சூழலால் மாணவர்கள் விண்ணப்பிப்பதைத் தவிர்க்கக்கூடும். படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவில் தங்குவது தொடர்பான கெடுபிடிகளால் இந்நிலைமை மேலும் மோசமாகலாம் என்று வல்லுநர்கள் சுட்டினர்.
அதேவேளையில், அமெரிக்க உள்நாட்டு மாணவர்களின் விண்ணப்பங்கள் 4 விழுக்காடு அதிகரித்துள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எஸ்ஏடி (SAT), ஏசிடி (ACT) போன்ற தரப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை விண்ணப்பத்தில் வழங்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் 11 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
யேல் (Yale), கொலம்பியா (Columbia), பிரின்ஸ்டன் (Princeton) உள்ளிட்ட முன்னணிப் பல்கலைக்கழகங்கள், மீண்டும் சேர்க்கைக்கான தேர்வு மதிப்பெண்களைக் கட்டாயமாக்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.


