ஜோகூர் பாரு: மலேசிய மக்களுக்கான சலுகை விலை எரிபொருளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு நாடு தழுவிய அமலாக்க நடவடிக்கைகளை விரிவுபடுத்தி உள்ளது.
வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் RON95 பெட்ரோல் வாங்குவதற்கு விதிக்கப்பட்ட தடை ஏப்ரல் 1ஆம் தேதி நடப்புக்கு வந்ததுமுதல் 31 விதிமீறல்கள் நிகழ்ந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
ஆயினும், அந்த மானிய விலை பெட்ரோலையும் சாதாரண பெட்ரோலையும் கண்டறிவதில் குழப்பம் உள்ளதென பிடிபட்டவர்கள் தெரிவிப்பதாக என அமலாக்கத் துறை தலைமை இயக்குநர் அஸ்மான் ஆடம் கூறியுள்ளார்.
விதிகளை மீறியதாகப் பிடிபடுவோர் அபராதம் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வர். மேலும், குற்றத்தின் கடுமையைப் பொறுத்து 1 மில்லியன் ரிங்கிட் வரை அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
இதற்கிடையே, ஜோகூரின் முக்கிய நுழைவாயில்களில் மேற்கொள்ளப்பட்ட வாகன நுழைவு அனுமதி (விஇபி) தொடர்பான அமலாக்க நடவடிக்கையில் 2.195 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 5,984 அபராதச் சீட்டுகளை சாலைப் போக்குவரத்துத் துறை வழங்கியுள்ளது.
விஇபி முறை நடப்புக்கு வந்ததிலிருந்து 2025 ஜூலை முதல் நுழைவாயில்களில் 82,987 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அது தெரிவித்தது.
நுழைவாயில்களில் வெளிநாட்டு வாகனங்களை நேரடியாகக் கண்காணிப்பதற்கும், மானிய முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏதுவாக விஇபி அமைப்பை தானியக்க எண் பலகை அங்கீகாரத் தொழில்நுட்பத்துடன் அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

