ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் உள்ள மாஜு ஜெயா வட்டாரத்தில் உள்ள மலிவு விலை ஹோட்டலில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 19 வயது சந்தேக நபர் ஒருவரை ஜோகூர் பாரு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, புதன்கிழமையன்று (மார்ச் 11) இரவு 8 மணியளவில் ஜோகூர் பாருவில் உள்ள கூட்டுரிமை குடியிருப்பில் வெளிநாட்டைச் சேர்ந்த அந்தச் சந்தேக நபர் பிடிபட்டதாக, ஜோகூர் காவல்துறையின் துணை ஆணையர் ஹூ சுவான் ஹுவாட் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து பழுப்பு நிற டீ-சட்டை, நீல நிற ஜீன்ஸ், கறுப்பு நிற தொப்பி, ஒரு ஜோடி கறுப்பு ரப்பர் காலணிகள், கண்காணிப்பு கேமரா பதிவு இயந்திரம், இரண்டு கைப்பேசிகள் உள்ளிட்ட பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபரைப் பற்றி ஆய்வு செய்ததில் அவருக்கு இதற்கு முன் குற்றப் பின்னணி ஏதும் இல்லை என்பதும் அவருக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது என்று வியாழக்கிழமையன்று (மார்ச் 12) தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர் மார்ச் 18ஆம் தேதி வரை ஏழு நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்படுவதாகவும் இது கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் திரு ஹூ மேலும் தெரிவித்தார்.
பாலியல் தொழிலாளி என்று நம்பப்படும் அந்தப் பெண், புதன்கிழமையன்று (மார்ச் 11) ஹோட்டல் அறை ஒன்றில் உடலில் பல கத்திக்குத்துக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

