மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர் விண்ணப்பங்கள் இனி முழுமையாக இணையத்தில்: மனிதவள அமைச்சு

மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர் விண்ணப்பங்கள் இனி முழுமையாக இணையத்தில்: மனிதவள அமைச்சு

2 mins read
656b782a-31b9-4e03-beb2-8afe3bc89dd1
வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு எடுப்பதற்கான விண்ணப்பங்கள் எல்லாம் முறையாக இருந்தால், நிபந்தனை ஒப்புதல் கடிதத்தை 14 நாள்களுக்குள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: புளூம்பெர்க்
Google News Preferred Icon

புத்ராஜெயா: மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இப்போது ‘வெளிநாட்டு ஊழியர்கள் மத்திய நிர்வாகக் கட்டமைப்பு’ மூலம் முழுமையாக இணையத்திலேயே பரிசீலிக்கப்படுகின்றன. இதன்வழி முதலாளிகள் நேரில் சென்று விண்ணப்பிக்கும் அல்லது அலுவலகங்களுக்குச் செல்லும் தேவை சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) முதல் அகற்றப்பட்டுள்ளது.

முதலாளிகள் அரசாங்க அலுவலகங்களுக்குத் திரும்பத் திரும்பச் செல்வதைக் குறைக்கவும் காத்திருக்கும் நேரத்தைச் சுருக்கவும் இந்த மின்னிலக்கமயமாக்கல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. அத்துடன் ஒட்டுமொத்த நடைமுறையை மேலும் சீராகவும் வெளிப்படையாகவும் மாற்றுவதும் நோக்கம்.

இருப்பினும், இந்த நடவடிக்கை வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகப் பொருள்படாது என்பதையும் அமைச்சு தெளிவுபடுத்தியது.

“அனைத்து விண்ணப்பங்களும் தீவிரப் பரிசீலனை, தொடர்புடைய சட்டங்கள், தகுதித் தேவைகள், வெளிநாட்டு ஊழியர் வேலைவாய்ப்புக் கொள்கைகள், சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளின் ஆய்வுகளுக்கு உட்பட்டே இருக்கும்,” என்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப நடைமுறைகள், 1955ஆம் ஆண்டின் வேலைவாய்ப்புச் சட்டத்தின் ‘60கே’ பிரிவின்கீழ் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான முன்அனுமதியைப் பெறுவதில் தொடங்கி, நிபந்தனை ஒப்புதல் கடிதம் வழங்கப்படும் வரை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு கூறியது.

விண்ணப்பங்கள் எல்லாம் முறையாக இருந்தால், ஒப்புதல் கடிதத்தை 14 நாள்களுக்குள் பெற முடியும்.

முதலாளிகள், https://fwcms.com.my/ என்ற இணையத்தளம் வழியாக வெளிநாட்டு ஊழியர்கள் மத்திய நிர்வாகக் கட்டமைப்பை அணுகலாம்.

இதற்கிடையே, உணவகத் துறைக்காக 15,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒதுக்கீடு செய்யப்படுவதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சென்ற மாதம் 24ஆம் தேதி அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, முதலாளிகளின் விண்ணப்பங்களை எளிதாக்கப் படிப்படியாக ஒதுக்கீடு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

இந்த ஒதுக்கீட்டில் 5,000 வெளிநாட்டு ஊழியர்களின் விண்ணப்பங்களின் தொடர்பில் 1,033 முதலாளிகளிடம் நேர்காணல் நடத்தப்பட்டு, ஒப்புதலுக்காகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அறிக்கை குறிப்பிட்டது.

நேர்காணல்களை முடித்த முதலாளிகள் அல்லது புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விரும்புவோர் மத்திய நிர்வாகக் கட்டமைப்பின் மூலம் நடைமுறைகளை நிறைவு செய்யுமாறு அமைச்சு ஆலோசனை கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்
வெளிநாட்டு ஊழியர்வேலை அனுமதிச்சீட்டுமலேசியாமனிதவள அமைச்சுஇணையம்விண்ணப்பம்முதலாளி