சோல்: தென்கொரியாவின் தெற்கு ஜியோலா மாநிலத்தில் உள்ள நாஜு பகுதியில், செங்கல் தொழிற்சாலையில் தென்கொரிய ஆடவர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு ஊழியரைப் பாரந்தூக்கியில் கட்டினார்.
அந்த ஊழியர் சிரித்ததால் அவ்வாறு செய்ததாக அந்த ஆடவர் காவல்துறையிடம் தெரிவித்ததாக மனித உரிமைக் குழு ஒன்று கூறியது.
‘‘அவரது சக ஊழியருக்கு நன்கு கற்றுக்கொடுக்கச் சொன்னேன். ஆனால், அந்த ஊழியர் அதற்குச் சிரித்ததால் நான் அவ்வாறு செய்தேன்,’’ என்று அந்தக் கொரிய ஆடவர் புலன் விசாரணையாளர்களிடம் கூறியதாக அந்தக் குழு தெரிவித்தது.
இருப்பினும், தாம் சிரிக்கவும் இல்லை என்றும் அந்த நேரத்தில் மேற்பார்வையாளர் கூறியது தமக்குப் புரியவும் இல்லை என்றும் ஊழியர் கூறினார்.
‘‘நான் செய்தது தவறு என்பது எனக்குத் தெரியவில்லை. பாரந்தூக்கியில் என்னைக் கட்டியபோது எனக்கு மிகவும் பயமாக இருந்தது,’’ என்று அந்த ஊழியர் கூறியதாகக் குழு சொன்னது.
சென்ற ஆண்டு டிசம்பர் கொரியா சென்றடைந்ததிலிருந்து அந்த வெளிநாட்டு ஊழியர் அத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
முதலில் அச்சம்பவம் குறித்து புகார் அளிக்கத் தயங்கியதாக அவர் கூறினார். தமக்கு மற்றொரு வேலை கிடைக்காது என்று அஞ்சியதே அதற்குக் காரணம்.
இதற்கிடையே, நல்ல வேலைச் சூழல் உள்ள ஒரு நிறுவனம் அந்த ஊழியரைப் பணியில் அமர்த்த விருப்பம் தெரிவித்துள்ளதாக தெற்கு ஜியோலா மாநிலத்தின் ஆளுநர் கிம் யுங் ரொக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய அச்சம்பவத்தைத் தொடர்ந்து, அதிபர் லீ ஜே மியுங் அதற்குக் காரணமானவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.