மத்திய கிழக்கில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

மத்திய கிழக்கில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
24 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினர் மத்திய கிழக்கில் வேலை பார்ப்பதாக அனைத்துலக மனிதவள அமைப்பு கணிப்பு
cfffa565-a2d7-43b3-8f90-9aabc4bfec62
பல அனைத்துலக விமானப் பயணங்கள் ரத்தாகியுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) நேப்பாளத்தில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் பணியாளரைச் சூழ்ந்து விவரங்கள் கேட்டறியும் மத்திய கிழக்கில் பணியாற்றும் ஊழியர்கள். - படம்: இபிஏ
குவைத் நகரை வானிலிருந்து ஆளில்லா ஊர்தி சனிக்கிழமை (பிப்ரவரி 28) எடுத்த படம்.
குவைத் நகரை வானிலிருந்து ஆளில்லா ஊர்தி சனிக்கிழமை (பிப்ரவரி 28) எடுத்த படம். - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகள் நடத்திவரும் போர் மூன்றாம் நாளாகத் தொடரும் நிலையில், அந்த வட்டாரத்தில் வேலை செய்யச் சென்ற மில்லியன்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் செய்வதறியாது சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்கள் மருத்துவம், கட்டுமானம், வீட்டுப் பராமரிப்பு போன்ற அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுகின்றனர். தெற்காசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்ளாதேஷ், நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சார்ந்தோர்களும் பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, தாய்லாந்து போன்ற தென்கிழக்காசிய நாடுகளைச் சார்ந்தோரும் மத்திய கிழக்கில் பணியாற்றுகின்றனர்.

அனைத்துலக மனிதவள அமைப்பு ஏறத்தாழ 24 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினர் மத்தியக் கிழக்கில் வேலை பார்ப்பதாகக் கணித்துள்ளது.

ஊழியர்களைப் பாதுகாப்பான இடங்களில் இருந்துகொள்ளும்படி அந்நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. நிலைமை மோசமானால் எவ்வாறு அவர்களைத் திரும்ப வரவழைப்பது என்பது பற்றி ஆலோசனைகளை அவை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே இஸ்ரேலில் மருத்துவப் பணியில் இருந்த பிலிப்பீன்ஸ் தாதி ஒருவர் குண்டு வெடிப்பால் மரணமடைந்துள்ளதாக அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) தெரிவித்துள்ளார்.

ஈரான் நடத்திய தாக்குதலால் பலர் காயமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான், நேப்பாளம், பங்ளாதேஷைச் சேர்ந்த மூவர் மரணமடைந்துள்ளதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் குறிப்பிட்டுள்ளது.

குவைத் நகரைக் குறிவைத்து திங்கட்கிழமை (மார்ச் 2) ஈரான் ஆளில்லா வானூர்தித் தாக்குதல் நடத்தியுள்ளது. அவற்றை இடைமறித்து பெரும்பாலும் அழித்துவிட்டதாக குவைத் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக குவைத் நகரெங்கும் அபாய ஒலி எழுப்பப்பட்டது.

ருமைத்தியா, சால்வா குடியிருப்புகளுக்கு அருகில் நடந்த தாக்குதலில் யாருக்கும் காயமில்லை என்று குவைத் குடிமைத் தற்காப்புப் படையின் தலைமை இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

துபாய் நகரிலும் கத்தார் தலைநகர் தோஹாவிலும் திங்கட்கிழமை காலை தொடர்ந்து பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்