கோலாலம்பூர்: மலேசியாவில் மானிய விலையில் பொட்டலமிடப்பட்ட சமையல் எண்ணெய்யை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதைத் தடைசெய்யும் விதிமுறைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் என்று மலேசிய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் ஆர்மிசான் முகமது அலி தெரிவித்தார்.
“1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 6ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி வரைவு செய்யப்படவுள்ள விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் குடிமக்கள் அல்லாதவர்கள் மானிய விலையில் பொட்டலமிடப்பட்ட சமையல் எண்ணெய் வாங்குவதைத் தடைசெய்யும் விதிமுறைகளை அமைச்சு அரசிதழில் வெளியிடும்,” என்று வியாழக்கிழமை (ஜனவரி 29) அன்று மலேசிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் ஆர்மிசான் முகம்மது அலி கூறினார்.
எல்லாவித விநியோகச் சங்கிலியிலும் தரவுகளை மின்னிலக்க முறையில் பதிவு செய்யும் சமையல் எண்ணெய் விலை நிலைப்படுத்தல் திட்டம் (இகோஸ்), குடிமக்கள் அல்லாதவர்களுக்கு மானிய விலையில் சமையல் எண்ணெய்யை விற்பனை செய்வதற்கான தடையைத் திறம்பட அமல்படுத்த அரசாங்கத்திற்கு உதவுகிறது என்று அவர் கூறினார்.
கைப்பேசிச் செயலி அல்லது கிடைக்கக்கூடிய பிற வழிகள் மூலம், ‘இகோஸ்’ நிர்வாகத்தை அமைச்சு தொடர்ந்து மேம்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த அமைப்பு கொள்முதல் மற்றும் பரிவர்த்தனைகளைக் கண்காணித்து, மானிய விலையில் பொட்டலமிடப்பட்ட சமையல் எண்ணெய்யைச் சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்வதைத் தடுக்க உதவுகிறது. இது நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் திசைதிருப்பும் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் மூலம் ஏற்படுகிறது என்று அவர் விளக்கினார்.
‘இகோஸ்’ கைப்பேசிச் செயலி பயன்பாட்டின் வெளியீடு மே 2025 முதல் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
“மூத்த குடிமக்கள் மற்றும் இணைய வசதி இல்லாத, கைப்பேசி இல்லாத குறைந்த வருமானக் குழுக்களுக்கு, விற்பனை வளாகங்களில் உதவியும் ஆதரவும், சில்லறை விற்பனையாளர்களால் சிறப்பு வழிமுறைகள் மூலம் வழங்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, தற்போது நிதி அமைச்சுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் ‘த ஸ்டார்’ செய்தி தெரிவித்தது.

