ஜோகூர் சோதனைச் சாவடியில் வெளிநாட்டினரின் சிரமம் நீடிப்பு

2 mins read
383bb486-2398-4bbd-a9c5-55a7eb39b45f
சோதனைச் சாவடிகளில் பயணிகளின் வரிசை நீண்டிருந்தாலும் பாதுகாப்புச் சோதனை போன்றவை பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: மலாய் மெயில்

ஜோகூர் பாரு: ஜோகூர்-சிங்கப்பூர் நிலவழிச் சோதனைச் சாவடிகளில் ஏற்பட்ட கோளாறு நீடிக்கிறபோதிலும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பணிகள் வழக்கநிலையில் செயல்படுவதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

சோதனைச் சாவடியின் தானியக்க வாயில்கள் திடீரெனச் செயலிழந்ததால் ஏற்பட்ட நிலைமை குறித்து அது தனது ஃபேஸ்புக் பதிவில் விளக்கி உள்ளது.

பயணிகளின் வரிசை நீண்டுள்ளபோதிலும் பாதுகாப்புச் சோதனை போன்ற நடைமுறைகள் பாதிக்கப்படவில்லை என்றது அந்த அமைப்பு.

வெளிநாட்டுக் கடப்பிதழ்களைப் பயன்படுத்துவோர் சிரமங்களை எதிர்நோக்கியதாகவும் இருப்பினும் அந்தப் பாதிப்புகூட கணிசமான அளவிலேயே இருந்ததாகவும் அது அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சோதனைச் சாவடிகளின் எல்லாப் பகுதிகளும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் குறிப்பிட்ட அந்த அமைப்பு, மலேசியக் குடிமக்கள் தானியங்கி வாயில்களை எப்போதும்போலப் பயன்படுத்தலாம் என்று கூறிற்று.

“சுல்தான் இஸ்கந்தர் சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்தும் நிலையத்திலுள்ள (பிஎஸ்ஐ) தானியங்கி வாயில்களில் ஏற்பட்ட இடையூறுகள் இன்னும் நீடிக்கின்றன. வெளிநாட்டுக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி நுழையும் முறை இன்னும் சீராகவில்லை.

“இருப்பினும், அவர்கள் பேருந்துகள் உள்நுழையும் இடத்திலுள்ள 19 முதல் 22 வரையிலான தானியங்கி வாயில்களையும் பேருந்துகள் வெளியேறும் பகுதியிலுள்ள 5 முதல் 8 வரையிலான தானியங்கி வாயில்களையும் பயன்படுத்தலாம்.

“மலேசியக் குடிநுழைவுத் துறை தானியங்கி வாயில்களில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்ய தீவிரமாக முயன்றுவருகிறது. நிலைமையைக் கண்காணித்து, சரிசெய்வதில் அது முனைப்புடன் செயல்பட்டு வருகிறது,” என்று அந்தப் பதிவில் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜோகூரின் இரு சாவடிகளிலும் தானியங்கி வாயில்கள் இயங்காததால் சனிக்கிழமை (ஜனவரி 10) நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் குடிநுழைவு அனுமதிக்காக நீண்டநேரம் காத்திருந்தனர். வார இறுதி நாள் என்பதால் வழக்கத்தைவிட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நோக்கிச் செல்லும் ஜோகூர் பாருவின் பிஎஸ்ஐ நிலையமும் துவாஸ் நோக்கிச் செல்லும் காம்ப்ளெக்ஸ் சுல்தான் அபு பக்கார் (கேஎஸ்ஏபி) சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்தும் நிலையமும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, பிஎஸ்ஐ சாவடியில் பாதிப்பு அதிகமாக இருந்தது.

அங்குள்ள 39 தானியங்கி வாயில்களும் கதவுகளும், பேருந்துகளுக்கான பிரிவில் இருந்த 29 தானியங்கி வாயில்களும் சில நாள்களாகவே பிரச்சினைகளை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது.

2025 ஜூலை மாதமும் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது. முக்கியச் சோதனைச் சாவடிகளில் தானியங்கி வாயில்கள் முடங்கியதால் 380,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டனர்.

குடிநுழைவு அனுமதி முறையை விரைவாகச் செயல்படுத்தும்பொருட்டு சோதனைச்சாவடிகளில் 2024 ஜூன் 1 முதல் தானியங்கி வாயில்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்