லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகே ஜனவரி 22ஆம் தேதி புதிதாகக் காட்டுத் தீ மூண்டுள்ளது.
தீ வெகுவேகமாகப் பரவுவதால் ஆயிரக்கணக்கானோருக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேஸ்டேய்க் ஏரிக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் கடுமையான தீ விரைந்து பரவுவதாகவும் சில மணி நேரத்திற்குள் 3,200 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு சேதமடைந்ததாகவும் கூறப்பட்டது.
அந்த ஏரி, லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து 56 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ளது.
காற்று பலமாக வீசுவதால் அந்தப் பகுதி முழுவதும் அடர்த்தியான புகையும் தணலும் நிரம்பியுள்ளது. அது மேலும் பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 31,000 பேருக்கு வெளியேற்ற உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. வீடு தீயில் கருகாமல் இருக்கவேண்டுமே என்ற கவலையுடன் மக்கள் அங்கிருந்து வெளியேறத் தயாராவதாக ஊடகங்கள் கூறின.
அண்மையில் லாஸ் ஏஞ்சலிஸ் வட்டாரத்தில் ஏற்பட்ட இரண்டு பெருந்தீச் சம்பவங்களில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தன.
அவ்விரு தீச்சம்பவங்களின்போது குடியிருப்பாளர்கள் அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றத் தவறியதால் பெருஞ்சேதம் ஏற்பட்டதை அதிகாரிகள் சுட்டினர். மேலும் சேதத்தைத் தவிர்க்க, வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டோர் உடனடியாக வெளியேறுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கேஸ்டேய்க்கில் உள்ள தடுப்புக் காவல் நிலையத்திற்கும் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கைதிகள் ஏறத்தாழ 500 பேர் அருகில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.
தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் நீரைத் தெளிக்கும் ஹெலிகாப்டர்களும் விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

