கோலாலம்பூர்: மலேசியாவில் ‘ஃபார்ம் சிக்ஸ்’ (Form Six) மாணவர்கள் தொடர்ந்து கல்வி அமைச்சின்கீழ் இடம்பெற்றிருப்பர் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பள்ளிகள் ‘ஃபார்ம் சிக்ஸ்’ மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு முந்திய கல்வி பயிலும் மாணவர்களாகக் கருதவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மலேசியாவில் ‘ஃபார்ம் சிக்ஸ்’ என்பது ‘ஏ’ நிலைப் படிப்புகளுக்குச் சமமான பல்கலைக்கழகத்திற்கு முந்திய கல்விப்பாதையாகக் கருதப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில், ‘ஃபார்ம் சிக்ஸ்’ மாணவர்களை உயர்கல்வி அமைச்சின்கீழ் கொண்டுவரும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், அத்தீர்மானத்தை மாற்றியமைத்த பிரதமர் அன்வார், இம்மாற்றம் தொடர்பான விவகாரம் பின்னர் மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் ‘ஃபார்ம் சிக்ஸ்’ மாணவர்களுக்குத் தனிப் பல்கலைக்கழகக் கட்டடங்கள் உருவாக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
‘ஃபார்ம் சிக்ஸ்’ வகுப்புகளைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையாள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அந்த மாணவர்கள் ஒரே பள்ளி வளாகத்தைப் பகிர்ந்துகொண்டாலும் அவர்களுக்குத் தனியான கட்டடத் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று திரு அன்வார் வலியுறுத்தினார்.
அத்துடன், பொதுப் பள்ளிக் கூட்டங்களில் பங்கேற்பதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

