புத்ராஜெயா: கைது செய்யப்பட்ட முன்னாள் மலேசிய ராணுவத் தலைவரையும் அவரது இரண்டு மனைவியரையும் விசாரணைக் காவலில் வைக்க புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த மூவரும் மேலும் இரு தம்பதியரும் புதன்கிழமை (ஜனவரி 7) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் ராணுவத் தலைவரான முஹம்மது ஹஃபிஸுதீன் ஜந்தனை ஏழு நாள்களும் அவரது ஒரு மனைவியை ஆறு நாள்களும் மற்றொரு மனைவியை மூன்று நாள்களும் விசாரணைக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (ஜனவரி 8) காலை 10 மணியளவில், ஆணையத்திற்குச் சொந்தமான வேனில் அந்த மூவரும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
முன்னதாக, ராணுவத்தின் ஏலக்குத்தகை ஒன்றின் தொடர்பிலான விசாரணைக்காக ஜனவரி 7ஆம் தேதி அந்த மூவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
லஞ்ச ஊழல் தொடர்பாக அதே நாளில் மேலும் ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டு ஏழு நாள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டனர். கைது நடவடிக்கைகளை ஆணையத்தின் தலைவர் ஆஸம் பாகி உறுதி செய்தார்.
“ஊழல் தடுப்பு ஆணையம் நேர்மையுடனும் நிபுணத்துவத்துடனும் விசாரணை நடத்த கடப்பாடு கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
மலேசிய ராணுவத்துக்குப் பொருள்களை வாங்குவதற்குான ஏலக்குத்தகையை நிர்ணயிக்க ஒரு குழுவாகச் செயல்பட்ட சந்தேகத்தில் ஜனவரி 6ஆம் தேதி 17 நிறுவன இயக்குநர்கள் கைது செய்யப்பட்டு, ஐந்து நாள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டனர்.

