தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாகக் கூறி பங்ளாதேஷ் முன்னாள் தேர்தல் ஆணையர் கைது

2 mins read
1c4e57e1-7e99-4783-97ed-656aa6572277
பங்ளாதேஷ் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம்.நூருல் ஹுடா, 77. - கோப்புப்படம்: பிடிஐ

டாக்கா: தமது பதவிக்காலத்தின்போது நடைபெற்ற தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாகக் கூறி, பங்ளாதேஷின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கே.எம். நூருல் ஹுடா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பங்ளாதேஷ் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) திரு ஹுடா, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்ட 19 பேர்மீது புகார் அளித்தது.

அதன் அடிப்படையில் திரு ஹுடா கைதுசெய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) டாக்கா பெருநகரக் காவல்துறைத் துணை ஆணையர் மொகிதுல் இஸ்லாம் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாக ‘தி டெய்லி ஸ்டார்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2014, 2018, 2024ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களைத் திரு ஹுடா மேற்பார்வையிட்டார். அம்மூன்று தேர்தல்களிலும் திருவாட்டி ஹசினாவே வென்றார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமையன்று திரு ஹுடா டாக்காவிலுள்ள தமது வீட்டிற்கு வெளியே ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்.

அந்தக் கும்பல் காலணிகளால் திரு ஹுடாவைத் தாக்கியதும் அவருக்குச் செருப்பு மாலை அணிவித்ததும் அவர்மீது முட்டைகளை வீசியதும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் தெரிந்தன.

திரு ஹுடாவை இழிசொற்களால் வசைபாடிய அக்கும்பல், காவல்துறை வந்த பின்னரும்கூட அவரைத் தாக்குவதை நிறுத்தவில்லை எனக் கூறப்பட்டது.

அதன் தொடர்பில் இணையத்தில் வெளியான காணொளிகளால் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஞாயிறு நள்ளிரவில் ஓர் அறிக்கை வெளியிட்டது.

அதில், “கும்பலால் அமைதியற்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்மீதான தாக்குதலும் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அரசாங்கம் வலியுறுத்துகிறது,” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீறுவோர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்