அரச மரியாதையுடன் பங்ளாதேஷின் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கு

2 mins read
1d801a3b-11ab-4092-a2ab-4c85b743a73e
கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) திருவாட்டி கலிதா சியா சிகிச்சை பெற்றுவந்த பங்ளாதேஷ் மருத்துவமனையின் வெளியே அவரின் மறைவுச் செய்தியை அறிந்ததும் மக்கள் ஒன்றுகூடினர். - படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: தெற்காசியாவின் 170 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பங்ளாதேஷை இரண்டு முறை ஆட்சி செய்த அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான கலிதா சியா பேகத்தின் இறுதிச் சடங்குகள் அரச மரியாதையுடன் புதன்கிழமை (டிசம்பர் 31) தலைநகர் டக்காவில் நடைபெறுகிறது.

பலநாட்களாக உடல்நலமின்றி நோய்வாய்ப்பட்டிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை தமது 80வது வயதில் அவர் காலமானார்.

அதனையொட்டி, நோபல் பரிசு வென்ற தற்காலிகத் தலைவர் முஹம்மது யூனோஸ் அரசாங்கம் மூன்று நாள்களுக்கு பங்ளாதேஷ் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்தது. திருவாட்டி சியாவின் இறுதிச் சடங்குகள் அரச மரியாதையுடன் சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை மாலை நான்கு மணிக்கு நடத்தப்படவுள்ளது.

தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் அதிக அளவில் தலைநகரில் பணியமர்த்தப்படுவர்.

“பங்ளாதேஷ், அதன் மிகப் பெரிய பாதுகாவலரை இழந்துவிட்டது. அவரது விட்டுக்கொடுக்காத சமரசமற்ற தலைமையில் நாடு ஜனநாயகத்துக்கு எதிரான நிலைமைகளில் இருந்து பலமுறை மீட்கப்பட்டது,” என்று தற்காலிகத் தலைவர் முஹம்மது யூனோஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது நல்லுடல், மறைந்த கணவர், முன்னாள் அதிபர் சியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் வைக்கப்படும்.

அண்மையில் லண்டனில் பலஆண்டுகள் வாழ்ந்து நாடு திரும்பியுள்ள திருவாட்டி சியாவின் மகன் தாரிக் ரஹ்மான், நாட்டின் ஜனநாயகக் கனவுகளைக் கட்டமைத்த வழிகாட்டியின் இழப்பை எண்ணி நாடு அஞ்சலி செலுத்துகிறது என்றார்.

“பலமுறை கைது செய்யப்பட்டு, மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டு, சிறைத்தண்டனைகள் அனுபவித்து, அத்தனை இன்னல்களையும் அவர் எதிர்கொண்டார். இருப்பினும் அவரது குடும்பத்தினரை பரிவுடனும் பாசத்துடனும் அவர் அரவணைத்தார்,” என்று தாயாரைப் பற்றி உணர்ச்சிப் பூர்வமான எண்ணங்களை திரு தாரிக் ரஹ்மான் அறிக்கையில் வெளிப்படுத்தினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, திருவாட்டி சியாவின் தொலைநோக்கும் மரபும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் என்று தமது அஞ்சலி செய்தியில் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்கிறார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷ்டாக் டார் கலந்துகொள்ளவதாக டக்காவில் உள்ள அந்நாட்டு தூதரகம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்