விமானத்தின் கழிவறையில் குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி; உடன் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரின் கடப்பிதழ்

விமானத்தின் கழிவறையில் குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி; உடன் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரின் கடப்பிதழ்

1 mins read
ef166596-5196-4c53-9cdf-65a1dd57d0e9
நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு திரு டேவிட் கேமரன் திரும்பியபோது  அவருடன் ஒரு பாதுகாவலரும் இருந்ததாக பிரிட்டன் மெட்ரோபோலிட்டன் போலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். படம்: இபிஏ -

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனின் கடப்பிதழ், குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு துப்பாக்கி ஆகியவற்றை விமானம் ஒன்றின் கழிவறையில் பயணி ஒருவர் கண்டுபிடித்தார். திரு டேவிட் கேமரனின் பாதுகாவலர் அவற்றை அங்கு மறந்து விட்டுவிட்டதாக பிரிட்டிஷ் ஊடகமான 'தி சன்' செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு திரு கேமரன் திரும்பியபோது அவருடன் ஒரு பாதுகாவலரும் இருந்ததாக பிரிட்டன் மெட்ரோபோலிட்டன் போலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திரு கேமரன் பயணம் செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, அதிர்ச்சியடைந்த பயணி ஒருவர் துப்பாக்கியைக் கழிவறையில் கண்டதும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

துப்பாக்கி எடுக்கப்பட்டதை விமானி உறுதிப்படுத்தியதும் பயணிகள் அனைவரும் அச்சத்தில் உறைந்ததாக தி சன் குறிப்பிட்டது.

திரு கேமரனின் பாதுகாவலர் துப்பாக்கியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி உள்ளது என்றும் அது உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் விமானி கூறினார். ஆயினும் பயணிகள் சிலர் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்தனர்.

இந்தப் பிரச்சினையை மிகவும் கடுமையானதாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட போலிஸ் அதிகாரி, விசாரணை தொடங்கியிருப்பதாகச் சொன்னார்.

2016ஆம் ஆண்டில் பிரதமர் பதவியைத் துறந்த திரு கேமரன் அடிக்கடி ஞாபகமறதிக்குள்ளாகியவர் என்று கூறப்பட்டது.

2012ஆம் ஆண்டில் மதுக்கூடம் ஒன்றில் உணவருந்திய பிறகு தனது எட்டு வயது மகளை மறந்து அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதும் 15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து அவரை அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.