பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பொருளியல் அமைச்சர் திரு ரஃபிசி ராம்லி, தமது குடும்பம் திட்டமிட்டுத் தாக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி புத்ராஜெயா கடைத்தொகுதி கார் நிறுத்துமிடத்தில் அடையாளம் தெரியாத ஆடவர் தமது மகனை ஊசியால் குத்தியதாக அவர் தெரிவித்தார்.
பிற்பகல் 1.45 மணியளவில் புத்ராஜெயாவிலிருந்து புறப்பட்ட திரு ரஃபிசியின் மனைவியும் மகனும் காரில் ஏறியபோது ஆடவர் ஒருவர் திடீரென தமது மகனைப் பிடித்து ஊசியால் குத்தியதாக திரு ராம்லி குறிப்பிட்டார்.
மோட்டார்சைக்கிளில் இரண்டு ஆடவர்கள் தமது மனைவியின் காரைப் பின்தொடர்ந்தது சோதனை மூலம் தெரியவந்ததாகக் கூறிய அவர், அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று தான் நம்புவதாகச் சொன்னார்.
“தாக்குதலில் ஈடுபட்ட ஆடவர்கள் இருவரும் முழுமையாக கறுப்பு உடையில் இருந்தனர். அவர்கள் தலைக்கவசத்தால் முகங்களை மறைத்திருந்தனர். முன்கூட்டியே அங்கு வந்து காத்திருந்த அவர்கள் சரியான தருணத்தில் என் மகனைத் தாக்கினர்,” என்று திரு ரஃபிசி விவரித்தார்.
தமது மகன் உடனடியாக புத்ரா மலேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும் திரு ர்அஃபிசி சொன்னார்.
அதிகாரிகளிடம் திரு ரஃபிசியும் அவரது குடும்பமும் தங்கள் வாக்குமூலங்களைக் கொடுத்தனர்.
“சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களையும் விசாரணை விவரங்கள், மருத்துவப் பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றை காவல்துறையும் மருத்துவமனையும்தான் கொடுக்க வேண்டும்,” என்ற திரு ரஃபிசி, உதவி வழங்கியதற்காகக் காவல்துறைக்கும் மருத்துவமனைக்கும் நன்றி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய தாக்குதலில் தமது குடும்ப குறிவைக்கப்பட்டது இதுவே முதன்முறை என்ற திரு ரஃபிசி, குறிப்பிட்ட சில விவகாரங்கள் பற்றி பேசக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாக அதைக் கருதுவதாகச் சொன்னார்.
“பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை நான் எடுக்கும் வேளையில் எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் நான் அஞ்சமாட்டேன். என் கடமையை வழக்கம்போல தொடர்வேன்,” என்று திரு ரஃபிசி கூறினார்.