தப்பியோடிய முன்னாள் பிரதமர் யிங்லக் தாய்லாந்து திரும்பவுள்ளார்

1 mins read
386c5944-4098-4170-971a-df28572f0fdc
அரிசி சலுகைத் திட்டம் குறித்து 2016ஆம் ஆண்டு தமது கடமையை அலட்சியப்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட யிங்லக் ஷினவாத், தாய்லாந்தை விட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேங்காக்: தப்பியோடிய முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவாத் தாய்லாந்துக்குத் திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எவ்விதச் சிறப்புச் சலுகைகளும் கோராமல் தண்டனை விதிப்புக்கு ஆட்படுத்தப்படுவார் என்று முன்னாள் பியூ தாய் கட்சி உறுப்பினர் வோரச்சாய் ஹேமா தெரிவித்தார்.

தாய்லாந்து விமரிசையாகக் கொண்டாடும் சொங்கிரான் திருவிழா ஏப்ரல் 2025ல் நடைபெறவுள்ள நிலையில் அதற்குமுன் தம்முடைய சகோதரி யிங்லக் தாய்லாந்து திரும்ப உள்ளது குறித்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் அண்மையில் வெளிநாட்டு ஊடகங்களுடன் நடந்த நேர்காணலில் கூறினார்.

இது தொடர்பாக துணைப் பிரதமர் பும்தாம் விச்சயசாயின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ள திரு வோரச்சாய் கருத்துரைத்தார்.

“யிங்லக் நியாயமாக நடத்தப்படவில்லை என்று நம்புகிறேன். 2014 ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு இந்த வழக்குகள் முளைத்தன. சட்டப்பிரிவு 44ன்கீழ் ஆட்சிக்கவிழ்ப்புக்குக் காரணமானவர்களுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டது. அதே பிரிவைப் பயன்படுத்தி யிங்லக்கின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்காகவே செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. முக்கியமாக, யிங்லக்குக்கு எதிரான குற்றவியல் வழக்கு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே இது நடந்தது. இது, குற்றவியல் வழக்கில் குறுக்கிடுவதாக இல்லையா?” என்று நவம்பர் 23ஆம் தேதி திரு வோரச்சாய் வினவினார்.

தாய்லாந்துக் குடியுரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் மீண்டும் நாடு திரும்பும் உரிமை சட்டப்படி உள்ளது என்றும் தாய்லாந்து முன்னேறுவதற்குத் தற்போது ஒற்றுமையும் சமரசமும் தேவை என்றும் திரு வோரச்சாய் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்