முன்னாள் பிரெஞ்சு அதிபருக்கு ஐந்தாண்டுச் சிறை

2 mins read
dcbe63aa-0853-4ed4-9884-65b5b4026a1a
தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளார் நிக்கோலஸ் சர்க்கோஸி. - படம்: இபிஏ

பாரிஸ்: முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்க்கோஸிக்கு ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லிபியாவின் முன்னாள் தலைவர் முவாம்மர் கடாஃபியிடமிருந்து சட்டவிரோதமாக மில்லியன்கணக்கான யூரோ பெற்றதாகவும் அதற்காகச் சதித்திட்டம் தீட்டியதாகவும் தொடுக்கப்பட்ட வழக்கில் சர்க்கோஸி குற்றவாளி என பாரிஸ் குற்றவியல் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) தீர்ப்பளித்தது.

மறைமுக ஊழல், சட்டவிரோதப் பிரசார நிதியளிப்பு உள்ளிட்ட மற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து சர்க்கோஸி மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். ஆயினும், சிறையிலிருந்தபடிதான் அவர் அதனைச் செய்ய முடியும்.

தீர்ப்பு குறித்துக் கருத்துரைத்த 70 வயதான சர்க்கோஸி, அது ‘சட்டத்தின் மோசமான ஆட்சியை’ எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது என்றார்.

கடந்த 2007-12 காலகட்டத்தில் பிரெஞ்சு அதிபராக இருந்த சர்க்கோஸி, தம்மீதான வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் குறிப்பிட்டார். தாம் தவறிழைக்கவில்லை என்றும் தொடர்ந்து அவர் மறுத்துவந்தார்.

கடாஃபியிடமிருந்து நிதிபெற்று, அதனை 2007 தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அதற்குக் கைம்மாறாக, மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவிற்கு நல்லுறவை ஏற்படுத்த உதவுவதாக அவர் உறுதியளித்ததாக அரசுத் தரப்பு வாதிட்டது.

தேர்தல் பிரசாரத்திற்கு நிதியாதரவு பெறுவதற்காகத் தம்முடைய நெருங்கிய உதவியாளர்களை லிபிய அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள சர்க்கோஸி அனுமதித்ததாக நீதிபதி நெதாலி கவரினோ தெரிவித்தார்.

சர்க்கோஸி 100,000 யூரோ (S$151,000) அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

அடுத்துவரும் நாள்களில் அவர் சிறைக்கு அனுப்பப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரெஞ்சு அதிபர் ஒருவர் இத்தகைய குற்றச்சாட்டில் சிக்கி, சிறைக்குச் செல்வது இதுவே முதன்முறை.

சர்க்கோஸியின் மனைவியும் இத்தாலியில் பிறந்த விளம்பர அழகியுமான கார்லா புரூனி, கடாஃபி வழக்கு தொடர்பான வழக்கில் சான்றுகளை மறைத்ததற்காகவும் மோசடிக்குத் துணைபோனதாகவும் கூறி, கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்