ஜகார்த்தா: இந்தோனீசிய முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோ மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு புதிய கட்சியைத் தொடங்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
அதிபராகக் கிட்டத்தட்ட பத்தாண்டு சேவையாற்றிய திரு விடோடோ, ‘பார்ட்டை சூப்பர் டெர்புக்கா’ அல்லது ‘சூப்பர் பார்ட்டி’ என்ற கட்சியைத் தொடங்க திட்டமிடுவதாகக் கூறினார்.
மாட்டா நெஜ்வா என்ற இந்தோனீசியத் தொலைக்காட்சி நேர்காணலில் பிப்ரவரி 11ஆம் தேதி ‘சூப்பர் பார்ட்டி’ கட்சிக் குறித்து திரு விடோடோ முதன்முறையாகப் பேசினார்.
“மிகவும் வெளிப்படையாக உள்ள ஓர் அரசியல் கட்சி வேண்டும். அது அனைத்து உறுப்பினர்களுக்கும் சொந்தமானதாகவும் இருக்கவேண்டும். அதுதான் எதிர்காலத்துக்கு ஏற்ற மிக சிறந்த அரசியல் கட்சி,” என்றார் திரு விடோடோ.
உள்ளூர் ஊடகத்துடன் (பிப்ரவரி 14) நடத்தப்பட்ட கூட்டத்தில் ‘சூப்பர் பார்ட்டி’ கட்சியின் அனைத்து தீர்மானங்களிலும் பங்குதாரர்களின் பங்களிப்பு இருக்கும் என்று திரு விடோடோ குறிப்பிட்டார்.
திரு விடோடோ முன்வைத்த பரிந்துரை இந்தோனீசியாவில் உள்ள பல முக்கியக் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
திரு விடோடோ அதிபர் பதவியிலிருந்து விலகி ஐந்து மாதங்களாகிவிட்டன.
இருப்பினும், மத்திய ஜாவாவில் உள்ள அவரது இல்லத்தை முக்கிய பிரமுகர்களின் கூட்டம் மொய்க்கிறது.
தொடர்புடைய செய்திகள்
சிலர் ஆலோசனை கேட்க வருகின்றனர். சிலர் விண்ணப்பங்களை முன்வைக்க வருகின்றனர். வேறு சிலர் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக அவருக்கு நன்றிகூறிச் செல்கின்றனர்.