நாரா, ஜப்பான்: முன்னாள் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டெட்சுயா யமகாமி என்ற 45 வயது ஆடவருக்கு புதன்கிழமை (ஜனவரி 21) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திரு ஷின்சோ அபே, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் தேதி நாரா நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அச்சம்பவத்தில் தாமே தயாரித்திருந்த நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு குற்றவாளி அச்செயலைப் புரிந்துள்ளார்.
அரசியல் கொலைகள் போன்ற துப்பாக்கி வன்முறை அதிகம் நடைபெறாத ஜப்பானில் அதன்பிறகு, பழைமைவாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சமயப் பிரிவினைவாதிகளுக்குமான ரகசியத் தொடர்பு வெளியில் வந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
தண்டனை விதித்தபோது நீதிபதி சினிச்சி தனாகா, குற்றவாளி டெட்சுயா யமகாமி, திரு அபேயை கொன்றே தீரவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார் எனக் குறிப்பிட்டார்.
திரு அபே சிறிதும் எதிர்பாராத விதமாக அவரைப் பின்னால் இருந்து சுட்டது, வெறுக்கத்தக்க மிகவும் தீங்கான செயல் என்று நீதிபதி தெரிவித்தார்.
தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று, காலையில் இருந்தே பொதுமக்கள் நீதிமன்றத்திற்குள் நுழைய அனுமதிச் சீட்டுகளைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஜப்பானின் ஆக அதிகநாள் பிரதமராக இருந்த திரு அபேயைக் கொலைசெய்தது, துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிமுறை மீறல் போன்ற குற்றங்களை டெட்சுயா யமகாமி எதிர்கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொலை விசாரணை தொடங்கியதுமே குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
சுமத்தப்பட்ட இதர சில குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தாலும், ஜப்பானியச் சட்டப்படி, குற்றத்தை ஒருவர் ஒப்புக்கொண்டாலும் விசாரணை தொடர்ந்து நடத்தப்படும்.
திரு அபேயின் மறைவுக்குப் பிறகு கடுமையான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவரது மனைவி இன்னமும் துயரில் துவண்டுபோயுள்ளார் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
அரசியல் ஆதரவுள்ள ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ அமைப்புமீது தம் தாயார் கொண்டிருந்த பற்றால் குடும்பத்தில் விளைந்த பிரச்சினைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர குற்றவாளி கொலைசெய்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

