மலேசியாவின் முன்னாள் ராணுவத் தளபதிமீது நிதி மோசடிக் குற்றச்சாட்டு

2 mins read
c3bd25ce-44ed-48f4-be4d-7ae686b9877d
மலேசியாவின் முன்னாள் ராணுவத் தளபதி முகம்மது ஹஃபிசுதீன் ஜந்தான் (நடுவில்), வியாழக்கிழமை (ஜனவரி 22) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது அவற்றை ஒப்புக்கொள்ளவில்லை. - படம்: த ஸ்டார், ஏ‌ஷியா நியூஸ் நெட்வொர்க்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் ராணுவத் தளபதியும் அவரின் துணைவியாரும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றதன் தொடர்பில் வியாழக்கிழமை (ஜனவரி 22) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

ராணுவத்திற்கான பொருள்களைக் கொள்முதல் செய்ததன் தொடர்பில் பெரிய ஊழல் நடந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

57 வயது முகம்மது ஹஃபிசுதீன் ஜந்தானும் அவரின் துணைவியார் 26 வயது சல்வானி அனுவாரும் பல்லாயிரம் டாலர் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

மூத்த அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகச் சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தற்காப்பு அமைப்புகளைக் குறிவைத்து அதிரடிச் சோதனைகளை முடுக்கிவிட்டது.

ஹஃபிசுதீன் சென்ற ஆண்டு (2025) டிசம்பர் மாதம் உடனடி விடுப்பில் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன் பின்னர் ஆணையம் புலனாய்வைத் தொடங்கியது. முன்னாள் ராணுவத் தளபதிக்கும் அவரின் துணைவியாருக்கும் தொடர்புடைய நிறுவனங்களில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

அவர் இவ்வாண்டு ஜனவரி முதல் தேதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.

ஆணையம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, மூத்த ராணுவ அதிகாரிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் சென்ற ஆண்டு நவம்பருக்கும் இடையில் முறையற்ற நடவடிக்கைகளின் மூலம் ஏறக்குறைய 2.12 மில்லியன் ரிங்கிட் (S$670,567) ஹஃபிசுதீனின் வங்கிக் கணக்கில் போடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவருடைய துணைவியார் சல்வானிக்குச் சொந்தமான நிறுவனத்தின் கணக்கில் 77,000 ரிங்கிட் போடப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்குத் தொடரும்வரை, கடப்பிதழ்களைக் கொடுக்கும்படியும் மாதம் ஒரு முறை வந்து கையெழுத்திட்டுச் செல்லும்படியும் ஆணையம் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயலும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும். அத்துடன் முறையற்ற வகையில் பெறப்பட்ட தொகையைப் போன்று ஐந்து மடங்கு அல்லது 5 மில்லியன் ரிங்கிட் இதில் எது அதிகமோ அதனை அபராதமாகச் செலுத்தவேண்டியிருக்கும்.

குறிப்புச் சொற்கள்