கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சரான டயிம் ஸைனுதீன் காலமானார்.
அவருக்கு வயது 86. கடந்த அக்டோபர் மாதம் திரு டயிம் அசுந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.
திரு டயிம், முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதின் நெருங்கிய நண்பராவார். டாக்டர் மகாதீர் பிரதமராக இருந்தபோது திரு டயிம் 1984லிருந்து 1991ஆம் ஆண்டு வரையிலும் 1999லிருந்து 2001 வரையிலும் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
நெருங்கிய நண்பரின் இறப்பு, தம்மை ஆறுதல்படுத்த இயலாத அளவிற்குத் துயரமளிப்பதாக டாக்டர் மகாதீர்.
மலேசியாவின் ஊழல் தடுப்புப் பிரிவு (எம்ஏசிசி), இருமுறை நிதி அமைச்சராகப் பதவி வகித்த திரு யிம் மீது சென்ற ஆண்டு விசாரணை நடத்தத் தொடங்கியது. தம்மிடம் இருக்கும் சொத்துகளை அவர் தெரியப்படுத்தவில்லை என்று கூறப்பட்டது.
கோலாலம்பூர், சிலாங்கூர், பாஹாங், நெகிரி செம்பிலான், பேராக், கெடா ஆகிய பகுதிகளில் தமக்கு இருக்கும் 38 நிறுவனங்களையும் 25 சொத்துகளையும் அவர் தெரியப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், ஒரு வங்கிக் கணக்கு, ஏழு சொகுசு கார்கள் ஆகியவை இருப்பதையும் அவர் தெரியப்படுத்தவில்லை என்று நம்பப்படுகிறது.
திரு டயிம் காலமானதற்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். தற்போது லத்தீன் அமெரிக்காவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள திரு அன்வார், புதன்கிழமையன்று (நவம்பர் 13) பெரு தலைநகர் லிமா சென்றடைந்ததும் திரு தாயிமின் மறைவு குறித்து தகவல் கிடைத்ததாகச் சொன்னார்.
“அவர் குடும்பத்துக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாட்டுக்கு, குறிப்பாக அவர் நிதி அமைச்சராகப் பதவி வகித்தபோது, அவர் ஆற்றிய பங்கை அரசாங்கம் கெளரவிக்கிறது,” என்று திரு அன்வார் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

