முன்னாள் மலேசிய உளவுத்துறைத் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் மலேசிய உளவுத்துறைத் தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு

2 mins read
d7b50ea7-b5d1-4289-a156-58c2ab6d93fd
மலேசியத் தற்காப்பு உளவுத் துறை அமைப்பின் முன்னாள் தலைவர் முகம்மது ரஸாலி அலியாஸ். - கோப்புப் படம்: ஃபிரீ மலேசியா டுடே

கோலாலம்பூர்: மலேசியத் தற்காப்பு உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவரான முகம்மது ரஸாலி அலியாஸ் மீது நீதிமன்றத்தில் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

20,000 டாலர் (25,200 வெள்ளி), 64,600 ரிங்கிட் (20,700 வெள்ளி) தொகை தொடர்பில் அந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 60 வயது முகம்மது ரஸாலி அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

“நான் குற்றம் புரியவில்லை என்று கூறுகிறேன். நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

முதல் குற்றச்சாட்டின்படி, ‌ஷேக் அகம்மது நாஃபிக் ‌ஷேக் ஏ ரகுமான் என்பவரிடமிருந்து முகம்மது ரஸாலி 20,000 டாலரை லஞ்சமாகப் பெற்றதாக நம்பப்படுகிறது. தற்காப்பு இணைய முறை ஒன்றுக்குச் சான்றிதழ் வழங்குவதன் தொடர்பில் முகம்மது ரஸாலி அத்தொகையைக் கையூட்டாகப் பெற்றதாக நம்பப்படுகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட்டிலிருந்து நவம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் ஜாலான் பாடாங் தெம்பாக், கெம் கெமெந்தாவில் உள்ள மலேசியத் தற்காப்பு உளவுத் துறை அமைப்பின் அலுவலகத்தில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஸ்பெயின் மற்றும் எஸ்டோனியாவுக்குத் திரும்பிச் செல்வதற்கான விமானப் பயணச் சீட்டுகளை வாங்க 26,800 ரிங்கிட் மற்றும் 37,800 ரிங்கிட் செலுத்தியதன் தொடர்பில் முகம்மது ரஸாலி மீது இரண்டாவது, மூன்றாவது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 2024 நவம்பர் 15ஆம் தேதி, அவ்வாண்டு ஏப்ரல் 28ஆம் தேதி ஆகிய நாள்களில் அதே இடத்தில் இக்குற்றங்களை அவர் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

இக்குற்றங்களுக்குப் பிணை வழங்க முடியாது என்று அரசாங்கத் துணை வழக்கறிஞர் லாவ் சின் ஹொவ் கூறினார். அதேவேளை, அவருக்குப் பிணை வழங்கலாமா என்பது நீதிமன்றம் எடுக்கவேண்டிய முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

200,000 ரிங்கிட் தொகைக்கு அவரைப் பிணையில் விடுவித்து அவரின் கடப்பிதழை மீட்டுக்கொள்ளுமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். முகம்மது ரஸாலி அண்மையில் ஓய்வுபெற்று அடிக்கடி வெளிநாடுகள் சென்றார் என்றும் அதனால் அவர் நாட்டைவிட்டு வெளியேறக்கூடிய அபாயம் உள்ளவர் என்றும் திரு லாவ் வாதிட்டார்.

எனினும், பரிந்துரைக்கப்பட்ட பிணைத் தொகை நியாயமற்றது என்று வழக்கறிஞர் கீதன் ராம் வின்சென்ட் வாதிட்டார். இறுதியில் பிணைத் தொகையாக ஒரே கட்டணத்தில் 50,000 ரிங்கிட் செலுத்தவேண்டும் என்றும் முகம்மது ரஸாலியின் கடப்பிதழ் மீட்டுக்கொள்ளப்படவேண்டும் என்றும் நீதிபதி சுஸானா உத்தரவிட்டார்.

இவ்வழக்கு வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வரும்.

குறிப்புச் சொற்கள்