முன்னாள் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மருத்துவமனையில் சேர்ப்பு

முன்னாள் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மருத்துவமனையில் சேர்ப்பு

1 mins read
b458f490-0b4b-40fe-9477-56cd01a1f4b9
முன்னாள் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப். - கோப்புப் படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்மீது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வேளையில், அவர் அந்நாட்டின் தேசிய இதயக் கழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால், அந்த மருத்துவமனையில் அவர்மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது, மருத்துவரின் ஆலோசனையைப் பொறுத்தது என்று தகவல் தெரிந்த ஒருவர் கூறினார். திரு சப்ரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அவருக்கு நெருக்கமான ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தம்மிடம் உள்ள சொத்துகள் குறித்த முழு விவரங்களைத் தெரியப்படுத்துவதன் தொடர்பிலானவை என நம்பப்படும் குற்றச்சாட்டுகள் திரு சப்ரிமீது சுமத்தப்படும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை காலையிலிருந்து செய்தியாளர்களும் ஊடகத் துறையினரும் சம்பந்தப்பட்ட கோலாலம்பூர் நீதிமன்றத்திற்கு வெளியே கூடத் தொடங்கிவிட்டனர். தேசிய இதயக் கழகத்திற்கு வெளியிலும் அவர்கள் கூடியிருக்கின்றனர்.

சொத்து விவரங்கள் குறித்து மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்குமாறு திரு இஸ்மாயில் சப்ரிக்கு முன்பு பலமுறை அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக விசாரணையின்போது ஆணையம் 170 மில்லியன் ரிங்கிட் (53.2 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களில் ரொக்கத்தையும் ஏழு மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 16 கிலோகிராம் தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாகுற்றச்சாட்டுநீதிமன்றம்