கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பொருளாதார அமைச்சரான ரஃபிஸி ரம்லியின் 12 வயது மகன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை மத்திய காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) மாற்றப்பட்டுள்ளது.
சிலாங்கூர் காவல்துறை தலைவர் ஷாஸெலி காஹா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக இந்த வழக்கை சிலாங்கூர் காவல்துறை விசாரித்து வந்தது.
“விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட விசாரணையின் ஒரு நடவடிக்கையாக இது இடம்பெறுகிறது. விசாரணைக்கு உதவ இது குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்,” என்று அறிக்கையில் ஷாஸெலி காஹா கேட்டுக் கொண்டார்.
நீதியை நிலைநாட்ட மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக அவர் சொன்னார்.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள கடைத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ரஃபிஸியின் மகன் தாக்கப்பட்டார்.
கறுப்பு நிற உடையுடன் முகக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கியதாக ரஃபிஸி கூறியிருக்கிறார்.
அவர்களில் ஒருவன் தனது மகனை இழுத்துச் சென்று ஊசியால் குத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

