பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் கான், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு வெளியே ராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஊழல் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதால் இம்ரான் கான் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை (மே 9) நீதிமன்றம் வந்தார். அப்போது அந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் மறுத்துவருகிறார். அரசியலில் பழிவாங்கும் நோக்கத்திற்காக தம் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
இம்ரான் கானை கைது செய்த அதிகாரிகள் ஆயுதங்கள் ஏந்தியவாறு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு மீண்டும் ஆட்சியைப்பிடிக்க இம்ரான் கான் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.